வழிகெட்ட தரீக்காக் கொள்கை
சகோதரர் பீ.ஜெ
அவர்கள் எழுதிய “கொள்கை விளக்கம்” எனும் புத்தகத்திலிருந்து இந்த வழி கெட்ட தரீக்காக்கள் தொடர்பான செய்திகள்
மட்டும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது..... முழு புத்தகத்தையும் வாசிக்க .. http://onlinepj.com/books/kolkai-vilakkam/
பைஅத், முரீது (தீட்சை)
மனிதனது அறிவை மழுங்கச் செய்யும்
எந்தக் காரியத்திற்கும் இஸ்லாத்தில் அறவே அனுமதி இல்லை. பைஅத், முரீது என்பது தான் மனிதனின் அறிவை மழுங்கச் செய்வதில்
முதடத்தில் உள்ளது எனலாம். இதை விரிவாகப் பார்ப்போம். ஷெய்கு எனப்படுபவர் தன்னிடம் பைஅத்
(தீட்சை) வாங்கியவர்களுடன் உள்ளத்தால் தொடர்பு வைத்திருக்கிறார்; முரீதின் (சீடரின்) உள்ளத்தில் ஊடுருவி போதனைகளைப் பதியச்
செய்கிறார்' என்றெல்லாம்
நம்பப்படுகிறது. இந்த நம்பிக்கை இஸ்லாமிய அடிப்படையில் சரியானது தானா? 'எந்த ஒரு மனிதனும் எந்த மனிதனின் உள்ளத்தின் மீதும் ஆதிக்கம்
செலுத்த முடியாது' என்பது
இஸ்லாத்தின் கோட்பாடு.
'உள்ளங்களைப் புரட்டக் கூடியவனே! என் உள்ளத்தை உனது
மார்க்கத்தில் உறுதியாக ஆக்கி வைப்பாயாக!' என்பது
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிரார்த்தனையாக இருந்தது. அறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல் : திர்மிதீ 3511
'மனிதனின் உள்ளங்கள் அல்லாஹ்வின் இரண்டு விரல்களுக்கிடையே
உள்ளன. அவன் விரும்பியவாறு அந்த உள்ளங்களைப் புரட்டுகிறான்' என்று
நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ் (ரலி) நூல்
: முஸ்லிம் 4798
'உள்ளங்கள் இறைவனது கைவசத்திலேயே உள்ளன; அதில் எவருக்கும் எந்தப் பங்குமில்லை' என்பதற்கு இவை தெளிவான சான்றுகள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்
மனைவியர் விஷயத்தில் மிகவும் நேர்மையுடன் நடந்து கொண்டார்கள். அவர்களுக்கிடையே
எந்தப் பாரபட்சமும் காட்டியது இல்லை. ஆனாலும் தம் மனைவியரில் ஆயிஷா (ரலி)யை
மட்டும் மற்றவர்களை விட அதிகம் நேசித்தார்கள். இவ்வாறு ஒருவர் மீது நேசம் வைப்பது
மனிதனின் முயற்சியால் நடப்பது அல்ல. முயற்சியையும் மீறி நடப்பதாகும்.
இதைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் குறிப்பிடும் போது
'இறைவா! எனது சக்திக்கு உட்பட்ட விஷயங்களில் நான் சரியாக
நடந்து கொள்கிறேன். எனது சக்திக்கு மீறிய (சிலர் மீது அதிக அன்பு வைக்கும்)
காரியங்களில் என்னைக் குற்றவாளியாக்காதே!' என்று
குறிப்பிடுபவர்களாக இருந்தனர். அறிவிப்பவர்
: ஆயிஷா (ரலி) நூல்கள் : திர்மிதீ 1059, அபூதாவூத்
1822, நஸயீ 3883 இப்னுமாஜா 1961, அஹ்மத்
23959
தமது உள்ளத்தைக் கட்டுக்குள் கொண்டு
வருவது அல்லாஹ்வின் தூதருக்கே இயலவில்லை என்றால், அடுத்தவர் உள்ளங்களில் ஷெய்கு (குரு) எப்படி ஆட்சி செலுத்த
முடியும்?
மிகவும் அக்கறையுடனும், ஆர்வத்துடனும், கலப்பற்ற
தூய எண்ணத்துடனும் தம் பெரிய தந்தை அபூதாலிபுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
போதித்தும் அவர் இஸ்லாத்தை ஏற்கவில்லை. அவரது உள்ளத்தை ஊடுருவி போதனையைப் பதியச்
செய்ய இயலவில்லை.
இது பற்றி இறைவன் கூறும் போது
(முஹம்மதே!)
நீர் விரும்பியோரை உம்மால் நேர் வழியில் செலுத்த முடியாது! மாறாக, தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர் வழி காட்டுகிறான். அவன்
நேர் வழி பெற்றோரை நன்கறிந்தவன். அல்குர்ஆன் 28:56
என்ற வசனத்தை அருளினான்.
எத்தனையோ நபிமார்கள் தங்கள்
மனைவியருக்கும், மக்களுக்கும், பெற்றோருக்கும் செய்த போதனைகள் பயனளிக்கவில்லை.
மலைகளைப்
போன்ற அலை மீது அது அவர்களைக் கொண்டு சென்றது. விலகி இருந்த தன் மகனை நோக்கி 'அருமை மகனே! எங்களுடன் ஏறிக் கொள்! (ஏக இறைவனை)
மறுப்போருடன் ஆகி விடாதே!' என்று
நூஹ் கூறினார். 'ஒரு
மலையில் ஏறிக் கொள்வேன்; அது
என்னைத் தண்ணீரிலிருந்து
காப்பாற்றும்' என்று
அவன் கூறினான். 'அல்லாஹ்
அருள் புரிந்தோரைத் தவிர அல்லாஹ்வின் கட்டளையிருந்து காப்பாற்றுபவன் எவனும் இன்று
இல்லை' என்று அவர் கூறினார்.
அவ்விருவருக்கிடையே அலை குறுக்கிட்டது. அவன் மூழ்கடிக்கப்பட்டோரில் ஆகி விட்டான். 'பூமியே! உனது தண்ணீரை நீ உறிஞ்சிக் கொள்! வானமே நீ நிறுத்து!' என்று (இறைவனால்) கூறப்பட்டது. தண்ணீர் வற்றியது. காரியம்
முடிக்கப்பட்டது. அந்தக் கப்பல் ஜூதி மலை மீது அமர்ந்தது. 'அநீதி இழைத்த கூட்டத்தினர் (இறையருளை விட்டும்) தூரமானோர்' எனவும் கூறப்பட்டது. நூஹ், தம் இறைவனை அழைத்தார். 'என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவன்; உனது வாக்குறுதியும் உண்மையே; நீயே தீர்ப்பு வழங்குவோரில் மேலானவன்' என்றார். 'நூஹே! அவன் உன் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன்; இது நல்ல செயல் அல்ல; உமக்கு அறிவு இல்லதாது பற்றி என்னிடம் கேட்காதீர்; அறியாதவராக நீர் இருக்கக் கூடாது என உமக்கு அறிவுரை
கூறுகிறேன்' என்று
அவன் கூறினான். 'இறைவா!
எனக்கு அறிவு இல்லாதது பற்றி உன்னிடம் கேட்பதை விட்டும் உன்னிடமே நான்
பாதுகாப்புத் தேடுகிறேன்; நீ என்னை
மன்னித்து அருள் புரியா விட்டால் நஷ்டமடைந்தவனாக ஆகி விடுவேன்' என்று அவர் கூறினார். அல்குர்ஆன் 11: 42-48
நூஹுடைய
மனைவியையும், லூத்துடைய
மனைவியையும் (தன்னை) மறுப்போருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் காட்டுகிறான்.
அவ்விருவரும் நமது இரு நல்லடியார்களின் மனைவியராக இருந்தனர். அவர்களுக்குத்
துரோகம் செய்தனர். எனவே அவ்விருவரையும் அல்லாஹ்விடமிருந்து அவர்கள் சிறிதளவும்
காப்பாற்றவில்லை. 'நரகில்
நுழைவோருடன் சேர்ந்து இருவரும் நுழையுங்கள்!' என்று கூறப்பட்டது. (அல்குர்ஆன் 66:10)
இவையெல்லாம் நமக்கு என்ன பாடம்
கற்பிக்கின்றன?
'ஒருவர் எவ்வளவு இறையச்சம் உடையவர் ஆனாலும், தூய்மையான எண்ணம் கொண்டவரானாலும், பழுத்த பழமாக இருந்தாலும் அவர் தனது போதனைகளை எந்த
உள்ளங்களிலும் சேர்ப்பிக்க முடியாது' என்பது
தான் இதிலிருந்து நாம் பெற வேண்டிய பாடம்.
இதற்கு மாற்றமாக பைஅத், முரீது என்பது அமைந்துள்ளது.
எடுத்துக் காட்டாக, முரீது வியாபாரத்தில் நேர்மையான வியாபாரிகள் என்று
நம்பப்படும் சிஷ்திய்யா தரீக்காவை எடுத்துக் கொள்வோம். இந்தியாவில் குறிப்பாக
தமிழகத்தில் மவ்லவிகள் பலரும் இந்த தரீக்காவில் முரீது வாங்கியுள்ளனர்.
ஹுஸைன் அஹ்மத் மதனீ, ரஷீத் அஹ்மத் கங்கோஹி போன்ற பெரியார்களெல்லாம் இதன்
கலீஃபாக்களாக இருந்ததாகச் சொல்கிறார்கள். தப்லீக் தஃலீம் புத்தகம் எழுதிய முஹம்மது ஜக்கரிய்யா
அவர்கள் இந்த தரீக்காவின் வரலாறு பற்றி உருதுவில் எழுதிய நூலை ஆரணியைச் சேர்ந்த
கமாலுத்தீன் அவர்கள் (இவர் தமிழகத்தில் இந்த தரீக்காவின் கலீஃபா அதாவது ஏஜெண்ட்) 'சிஷ்திய்யா ஷைகு வரலாறு' என்ற பெயரில் தமிழாக்கம் செய்துள்ளார்.
இவருக்கு நிறைய மவ்லவிகள் இன்றளவும்
முரீதுகளாக உள்ளனர். அந்த நூலில் இடம் பெறும் சில சம்பவங்களையே இங்கே நாம்
எடுத்துக் காட்டாக கூறப் போகிறோம்.
மஷாயிகுமார்கள் (பெரியார்கள்)
தங்களிடமுள்ள குணாதிசயங்களைப் பிறரில் பரவச் செய்கிறார்கள். அதற்கு நடைமுறையில்
தவஜ்ஜுஹே இத்திஹாதீ' என்று
சொல்லப்படுகின்றது. (மேற்படி நூல் பக்கம் 10)
இந்த தவஜ்ஜுஹே இத்திஹாதீ' சம்பந்தமாக ஹஜ்ரத் காஜா பாக்கிபில்லாஹ் கத்தஸல்லாஹு
சிர்ரஹுல் அஸீஸ்' அவர்களின்
சம்பவம் பிரபல்யமானதாகும். அதை ஷைகு அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள் எழுதியுள்ளார்கள்.
ஒரு முறை ஹஜ்ரத் அவர்களுடைய வீட்டிற்கு விருந்தனர் பலர் வந்து விட்டனர்.
விருந்தினரை உபசரிக்க வீட்டில் எதுவுமில்லை. கவலையுடன் ஹஜ்ரத் அவர்கள் வெளியே
வந்தார்கள். அருகே ரொட்டிக் கடைக்காரர் ஒருவர் வந்தார். அவர் ஹஜ்ரத் வீட்டிற்கு
விருந்தினர் வந்ததைப் பார்த்து விட்டு நல்ல உணவுப் பொருட்களைத் தட்டில் வைத்து
எடுத்துக் கொண்டு ஹஜ்ரத்திடம் வந்தார். ஹஜ்ரத் அவர்கள் அம்மனிதரை நோக்கி மகிழ்ச்சி
மேலீட்டால், 'உனக்கு என்ன வேண்டுமோ
கேள்!' என்றார்கள். அதற்கு
அம்மனிதர் 'உங்களைப் போன்றே என்னையும் ஆக்கி
விடுங்கள்!' என்றார். ஹஜ்ரத் அவர்கள், நீ சமாளிக்க மாட்டாய்' என்றார்கள். எனினும் அம்மனிதர் பல முறை கெஞ்சி வேண்டிக்
கொள்ள ஆரம்பித்து விட்டார். பல தடவை மறுத்தும் அவர் கேட்காததால் வேறு வழியின்றி
ஹஜ்ரத் அவர்கள் அவரை வேறு அறைக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே தவஜ்ஜுஹே
இத்திஹாதீ' செய்தார்கள்.
அறையிலிருந்து வெளியே வந்த போது இருவரின் முகமும் ஒரே மாதிரித் தோற்றமளித்தது.
ஹஜ்ரத் காஜா சாஹிப் உணர்வோடு இருந்தார்கள். அம்மனிதரோ உணர்வின்றி இருந்தார். இது
தான் வித்தியாசம். அதே உணர்வற்ற நிலையில் மூன்று நாட்கள் இருந்து பின்னர் இறந்து
விட்டார். (அதே நூல் பக்கம்: 11, 12)
இப்படியெல்லாம் மூளைச் சலவை செய்யும்
மடமைக் கதைகளுக்கும் 'சுப்ஹானல்லாஹ்' சொல்லக் கூடியவர்கள் இருக்கிறார்கள். மனிதனை முட்டாளாக்கி, அல்லாஹ்வின் தூதரை விடவும் தன்னை உயர்த்திக் கொள்ள
முற்படும் இந்தப் பித்தலாட்டக்காரர்கள் ஷெய்குகளாம்! பக்குவப்பட்டவர்களாம்!
மேலே நாம் காட்டிய சான்றுகளுடன் இதை
ஒப்பிட்டுப் பாருங்கள்! இவர்கள் இஸ்லாத்திற்கு எவ்வளவு பகிரங்கமான எதிரிகளாக
உள்ளனர் என்பதை அறிவீர்கள். கற்பனை உலகில் தங்கள் முரீதுகளை மிதக்க விடுவதற்காக இவர்கள்
கட்டியுள்ள கதைகள் எண்ணிலடங்கா.
'அப்துல்
வாஹித் சார்பாக நதியே நீ காய்ந்து விடு' என்று நதியிடம் அப்துல் வாஹித் தன்
முரீதுகளை சொல்லச் சொன்னார்களாம். அப்படியே நடந்ததாம்.(அதே நூல் பக்கம் : 143)
ஹஜ்ரத் அவர்களிடம்
பக்கீர்கள் கூட்டம் ஒன்று வந்ததாம். ஹஜ்ரத் துஆ செய்தததும் காசு மழை பொழிந்ததாம். அதற்கு
அல்வா வாங்கிச் சாப்பிட்டார்களாம். (அதே நூல் பக்கம் 143)
நான்கு அல்லது
ஐந்து நாட்களுக்கொருமுறை நோன்பு திறப்பது இவர்களின் வழக்கமாக இருந்தது. அதுவும் புல்
பூண்டுகளைக் கொண்டு நோன்பு திறப்பார்கள். (அதே
நூல் பக்கம் 156)
இப்படியெல்லாம் இஸ்லாத்தைத் தகர்த்து
தரை மட்டமாக்கும் சம்பவங்கள் ஏராளம்! தன்னைப் போன்ற ஒரு மனிதரை இந்த அளவுக்கு
உயர்த்திட இவர்கள் எங்கே கற்றார்கள்? அல்லாஹ்விடமிருந்தா? அல்லாஹ்வின் தூதரிடமிருந்தா? நிச்சயமாக இல்லை.
பண்டாரங்கள், பரதேசிகள் ஆகியோரிடமிருந்து இதைக் கற்று இஸ்லாத்தில்
திணித்து விட்டனர். பிறர், இஸ்லாத்திற்கு
வருவதற்கு தடைக் கற்களை ஏற்படுத்தி விட்டனர். இவர்கள் கப்ரு வணக்கத்தை
ஏற்படுத்தியவர்களை விட மோசமானவர்கள். அல்லது அதற்குச் சற்றும் குறையாதவர்கள்.
மிகவும் உயர்வானது என மதிக்கப்படும்
தரீக்காவின் நிலை இது. இதே தரீக்காவில் இன்னும் நவீன கோட்பாடுகள் பல உள்ளன.
·
காலில்
விழச் சொல்லும் ஷெய்குகள்
·
இசையில்
மயங்கும் ஷெய்குகள்
·
தொழுகை
போன்ற வணக்கங்கள் தேவையில்லை எனக் கூறும் ஷெய்குகள்
என்றெல்லாம் பல பித்தலாட்டக்காரர்கள்
உள்ளனர்.
ஒழுங்கான இஸ்லாமிய ஆட்சி நடந்தால்
இவர்களெல்லாம் மரண தண்டனைக்கு உரியவர்கள்.
திருக்குர்ஆன் விரிவுரையாளர்களில்
அனைத்து தரப்பினாலும் ஏற்கப்பட்ட ஹிஜ்ரி 971ல் மரணமடைந்த இமாம் குர்துபீ (முஹம்மத் பின் அஹ்மத் அல்
அன்ஸாரி) அவர்கள் தமது 'அல் ஜாமிவுல் அஹ்காமில்
குர்ஆன்' எனும் திருமறை விரிவுரை
நூலில் குறிப்பிடுவதை இங்கே எடுத்துக் காட்டுவது பொருத்தமாக இருக்கும்.
சூஃபியாக்களின் கொள்கை முட்டாள்
தனமானதும், வழிகேடும் ஆகும். இஸ்லாம்
என்பது அல்லாஹ்வின் வேதத்தையும், அவன்
தூதருடைய நடைமுறையையும் தவிர வேறில்லை. நடனமாடுவது, இறைக் காதல் என்பதெல்லாம் ஸாமிரி என்பவன் உருவாக்கியதாகும்.
இஸ்லாமிய ஆட்சியாளர்கள், இவர்கள்
பள்ளிவாசலுக்கு வருவதைத் தடுத்து நிறுத்துவது அவசியமாகும். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புகின்ற எவரும் இவர்களின் அவைக்கு வருகை
தரக் கூடாது. இவர்களின் தவறுக்கு துணை நிற்கலாகாது. இது தான் இமாம் மாலிக், இமாம் அபூஹனீபா, இமாம்
ஷாபீ, இமாம் அஹ்மத் பின் ஹம்பல் மற்றும் முஸ்லிம் அறிஞர்களின்
முடிவாகும் என அபூபக்கர் தர்தூஷி அவர்கள் சூபியாக்கள் பற்றிய கேள்விக்கு
விடையளித்தார்கள்.
(பார்க்க தாஹா அத்தியாயம் 92 வது வசனத்தின் விரிவுரை)
இந்த வழிகெட்ட சூபியாக்கள் நான்கு
மத்ஹபுகளுக்கும் கூட அப்பாற்பட்டவர்கள் என்பதற்கு குர்துபி அவர்களின் இந்தக்
குறிப்பு சான்றாக அமைந்துள்ளது.
காலில்
விழலாமா?
ஆன்மீகத் தலைவர்களின் கால்களில்
விழுந்து கும்பிடுவது, அவர்களின்
கால்களைக் கழுவி, கழுவப்பட்ட
தண்ணீரை பக்தியுடன் அருந்துவது என்றெல்லாம் ஆன்மீகத் தலைவர்களுக்கு மரியாதை
செய்யப்பட்டு வருகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது
வாழ் நாளில் ஒருக்காலும் தமது கால்களில் விழுந்து மக்கள் கும்பிடுவதை
விரும்பவில்லை. அறியாத சிலர் அவ்வாறு செய்ய முயன்ற போது கடுமையாக அதைத்
தடுக்காமலும் இருந்ததில்லை.
நபிகள் நாயகம்
(ஸல்) காலத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியைப் பாருங்கள்!
நான் ஹியரா
என்னும் நகருக்குச் சென்றேன். அங்குள்ளவர்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிந்து
கும்பிடுவதைப் பார்த்தேன். 'இவ்வாறு சிரம் பணிவதற்கு நபிகள்
நாயகமே அதிகத் தகுதியுடையவர்கள்' என்று (எனக்குள்) கூறிக் கொண்டேன்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து 'நான்
ஹியரா என்னும் ஊருக்குச் சென்றேன். மக்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிவதைக்
கண்டேன். நாங்கள் சிரம் பணிந்திட நீங்களே அதிகம் தகுதியுடையவர்' என்று
கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் '(எனது
மரணத்திற்குப் பின்) எனது அடக்கத் தலத்தைக் கடந்து செல்ல நேர்ந்தால் அதற்கும்
சிரம் பணிவீரோ?' எனக் கேட்டார்கள். 'மாட்டேன்' என்று
நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'ஆம்; அவ்வாறு
செய்யக் கூடாது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் சிரம் பணியலாம் என்றிருந்தால்
கணவனுக்காக மனைவியை அவ்வாறு செய்யச் சொல்யிருப்பேன்' என்று
கூறினார்கள். அறிவிப்பவர்: கைஸ் பின் ஸஅத் (ரலி) நூல்: அபூதாவூத் 1828
தமது காலில் விழுவதற்கு அனுமதி
கேட்கப்பட்ட போது 'எந்த மனிதரும் எந்த
மனிதரின் காலும் விழக் கூடாது' என்று பொதுவான
விதியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காரணம் காட்டுகிறார்கள். காலில் விழுபவரும், விழப்படுபவரும் இருவருமே மனிதர்கள் தான் என்று கூறி சிரம்
பணிதல் கடவுளுக்கு மட்டுமே உரியது எனக் கூறுகிறார்கள்.
உலகம் முழுவதும் கணவர் காலில்
மனைவியர் விழுவது அன்றைக்கு வழக்கமாக இருந்தது. அதையே நான் அனுமதிக்காத போது என்
காலில் எப்படி விழலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
'உங்கள் கால்களில் நாங்கள் விழுகிறோமே' என்று மக்கள் கேட்கும் போது தமது மரணத்திற்குப் பிறகு தனது
அடக்கத்தலத்தில் விழுந்து பணிவார்களோ என்று அஞ்சி அதையும் தடுக்கிறார்கள். 'எனது மரணத்திற்குப் பின் எனது அடக்கத்தலத்தில்
கும்பிடாதீர்கள்' என்று
வாழும் போதே எச்சரித்துச் சென்றனர். எனவே தமது கால் விழுமாறு மக்களுக்கு வழி
காட்டுவோர் கயவர்களாவர்.
எழுந்து
நின்று மரியாதை செய்தல்
வயதில் பெரியவர், ஆசிரியர், தலைவர்கள், முதலாளிகள், நிர்வாகிகள், மேலதிகாரிகள் போன்றோருக்காக மற்றவர்கள் எழுந்து நின்று
மரியாதை செய்வதை உலகமெங்கும் காண்கிறோம். மேல்
நிலையில் உள்ளவர்கள் இந்த மரியாதையை உளமாற விரும்புவதையும் நாம் காண்கிறோம். ஆனால்
இஸ்லாத்தில் இதற்கு அனுமதி இல்லை.
எந்த மனிதரும் எந்த மனிதருக்காகவும்
மரியாதை செய்யும் விதமாக எழுந்து நிற்கக் கூடாது என்று நபிகள் நாயகம் கட்டளை
பிறப்பித்தார்கள்.
நபிகள்
நாயகத்துக்குப் பின் முஸ்லிம் சாம்ராஜ்யத்தின் ஐந்தாவது அதிபராகத் திகழ்ந்தவர்
முஆவியா (ரலி). அவர் வெளியே வந்த போது அவரைக் கண்ட அப்துல்லாஹ் பின் ஸுபைர்
அவர்களும், இப்னு சஃப்வான் அவர்களும் எழுந்து
நின்றனர். உடனே முஆவியா (ரலி) அவர்கள் 'அமருங்கள்' என்றனர்.
'தனக்காக மக்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று யார்
விரும்புகிறாரோ அவர் தனது தங்குமிடத்தை நரகத்தில் ஏற்படுத்திக் கொள்கிறார்' என்று
நபிகள் நாயகம் (ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன் என்றும் முஆவியா (ரலி)
கூறினார்கள். நூல்கள்: திர்மிதீ 2769 அபூதாவூத் 4552
மன்னருக்காகக் கூட மக்கள் எழக்
கூடாது. அவ்வாறு எழ வேண்டும் என்று எந்த முஸ்லிமும் எதிர்பார்க்கக் கூடாது என்பதை
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாக அறிவித்துச் சென்றதை இந்த வரலாற்றிருந்து
நாம் அறிகிறோம்.
உலகத்தில்
நபிகள் நாயகத்தை விட எங்களுக்கு விருப்பமான ஒருவரும் இருந்ததில்லை. ஆயினும்
அவர்கள் எங்களை நோக்கி வரும் போது நாங்கள் அவர்களுக்காக எழ மாட்டோம். இதை அவர்கள்
கடுமையாக வெறுப்பார்கள் என்பதே இதற்குக் காரணம். அறிவிப்பவர்:
அனஸ் (ரலி) நூல்கள்: அஹ்மத் 12068, 11895 திர்மிதீ 2678
தமக்காக மக்கள் எழக் கூடாது என்பதை
எந்த அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) வெறுத்தார்கள் என்பதற்கு பின்வரும் நிகழ்ச்சி
சான்றாகவுள்ளது.
ஒரு முறை நபிகள்
நாயகம் (ஸல்) நோய் வாய்ப்பட்டார்கள். அப்போது அவர்கள் உட்கார்ந்த நிலையில் தொழுகை
நடத்தினார்கள். நாங்கள் அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதோம். அவர்கள்
திரும்பிப் பார்த்த போது நாங்கள் நின்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். சைகை மூலம்
எங்களை உட்காரச் சொன்னார்கள். நாங்கள் உட்கார்ந்த நிலையில் அவர்களைப் பின்பற்றித்
தொழுதோம். தொழுகையை முடித்தவுடன் 'பாரசீக, ரோமாபுரி
மன்னர்கள் அமர்ந்திருக்க மக்கள் நிற்பார்களே! அது போன்ற செயலைச் செய்ய முற்பட்டு
விட்டீர்களே! இனி மேல் அவ்வாறு செய்யாதீர்கள். உங்கள் தலைவர்களைப் பின்பற்றித்
தொழுங்கள்! அவர்கள் நின்று தொழுகை நடத்தினால் நீங்களும் நின்று தொழுங்கள்! அவர்கள்
உட்கார்ந்து தொழுகை நடத்தினால் நீங்களும் உட்கார்ந்து தொழுங்கள்' என்று
கூறினார்கள். நூல்: முஸ்லிம் 701
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
உட்கார்ந்து தொழுத போது மக்களும் உட்கார்ந்து தொழுததாக புகாரி 689, 732,
733, 805, 1114, 688 ஆகிய ஹதீஸ்களிலும்
காணலாம். யாருக்கேனும் நிற்க இயலாத அளவுக்கு உடல் உபாதை ஏற்பட்டால் அவர்
உட்கார்ந்து தொழ அனுமதி உண்டு.
அந்த அடிப்படையில் தான் நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுவித்தார்கள். ஆனால் பின்னால் தொழுதவர்களுக்கு எந்த
உபாதையும் இல்லாததால் அவர்கள் நின்று தொழுதார்கள். அவர்கள் நபிகள் நாயகத்துக்கு
மரியாதை செய்வதற்காக நிற்கவில்லை.
ஆனாலும் முன்னால் நபிகள் நாயகம் (ஸல்)
அமர்ந்திருக்க பின்னால் மற்றவர்கள் நிற்பதைப் பார்க்கும் போது நபிகள் நாயகத்தின்
முன்னே யாரும் அமரக் கூடாது என்பதற்காக நிற்பது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. ஏனைய
நாட்டு மன்னர்களுக்கு முன் மக்கள் நிற்பது போல் இது தோற்றமளிக்கின்றது. அந்த வாடை
கூட தம் மீது வீசக் கூடாது என்பதற்காக அனைவரையும் அமர்ந்து தொழுமாறு நபிகள் நாயகம்
ஆணையிடுகிறார்கள்.
இந்த இடத்தில் ஒரு விஷயத்தைச்
சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். வரவேற்பதற்காகவும், அன்பை வெளிப்படுத்துவதற்காகவும் ஒருவருக்காக மற்றவர்
எழலாம். மரியாதைக்காகத் தான் எழக் கூடாது.
பெற்ற மகள்
தம்மைத் தேடி வந்த போது வாசல் வரை சென்று நபிகள் நாயகம் (ஸல்) வரவேற்றுள்ளனர்.
(திர்மிதீ 3807)
நம் வீட்டுக்கு ஒருவர் வரும் போது
நாம் எழலாம். அது போல் அவர் வீட்டுக்கு நாம் போகும் போது அவர் எழ வேண்டும்.
இதற்குப் பெயர் தான் வரவேற்பு. ஒருவர் நம்மிடம் வரும் போது நாம் எழுந்து வரவேற்கிறோம்.
ஆனால் அவரிடம் நாம் சென்றால் அவர் எழுந்து வரவேற்பதில்லை என்றால் மரியாதை
நிமித்தமாகவே அவருக்கு நாம் எழுந்துள்ளோம் என்பது பொருள். இது இஸ்லாத்தில் தடை
செய்யப்பட்டுள்ளது. எழுந்து நிற்பது இரு தரப்புக்கும் பொதுவாக இருந்தால் மட்டுமே
அது வரவேற்பில் அடங்கும்.
தரீக்காவின்
திக்ருகள்
சபையில் வட்டமாக அமர்ந்து
லாயிலாஹ இல்லல்லாஹ் 100 தடவை
பின்னர் எழுந்து நின்று
ஒருவருக்கொருவர் கைகளைக் கோர்த்துக் கொண்டு அல்லாஹ் என்று 100 தடவை
அஹ்' என்று 100 தடவை
கூறுகிறார்கள்.
ஒவ்வொரு கட்டத்திலும் வெவ்வேறு
பாடல்கள் பாடுகிறார்கள். ஒவ்வொருவரும் ஆடுவதால் கழுத்து, வயிறு, தோள்பட்டை
ஆகியவை சுருங்கி சுருங்கி விரிகின்றன. இதை நடத்தி வைக்க ஒருவர் தமது உள்ளங்கைகளைத்
தரையை நோக்கி வைத்து கைகளை வேகமாக அசைத்து திக்ருக்கு வேகமூட்டுகிறார். திக்ரு
முடிந்ததும் சபையில் இருந்த அனைவரும் அவருடைய கைகளை முத்தமிடுவதற்காக
முண்டியடித்துக் கொண்டு வருகின்றனர். இதில் காணப்படும் நிகழ்ச்சிகள் அனைத்தும்
நபிவழியா? இந்தக் கூத்துக்கள்
திருக்குர்ஆனுக்கும், நபிவழிக்கும்
முரணானவை. ஷாதுலியா தரீக்காவின் திக்ரு' என்று சில பகுதிகளில் நடத்தப்படும் இந்த திக்ரு பற்றி
விரிவாக நாம் அலச வேண்டும்.
உமது
இறைவனைக் காலையிலும், மாலையிலும்
மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்ல் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி
விடாதீர்! (அல்குர்ஆன்
7:205)
பணிவோடு தான் திக்ரு செய்ய வேண்டும்
என்று இவ்வசனம் கட்டளையிடுகிறது. இந்தக் கட்டளைக்கு மாற்றமாக ஆடிக் கொண்டும், பாடிக் கொண்டும், கைகால்களை உதறிக் கொண்டும் டான்ஸ் ஆடுகின்றனர். இதில்
கடுகளவாவது பணிவு இருக்கிறதா என்று யோசியுங்கள்.
மனதிற்குள்ளும், உரத்த சப்தமின்றியும் திக்ரு செய்யுமாறு இவ்வசனத்தில் இறைவன்
கட்டளையிடுகிறான்.
இந்த திக்ரோ பகிரங்கமாகவும், பயங்கர சப்தத்துடனும் நடத்தப்படுகின்றது. அல்லாஹ்வின்
பள்ளியில் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாற்றமாக அல்லாஹ்வை திக்ரு செய்கிறார்கள். இது
இறைவனுக்கு ஆத்திரமூட்டுமா? அன்பை
ஏற்படுத்துமா? என்று
சிந்தித்துப் பாருங்கள்!
இறைவனை திக்ரு செய்கிறோம் என்ற
பெயரில் மனிதர்கள் இயற்றிய பாடல்களைப் பக்திப் பரவசத்துடன் மெய் மறந்து
பாடுகின்றனர். மனிதனின் வார்த்தைகளை வணக்கமாகக் கருதுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
இறைவனுக்கென்று அழகிய திருநாமங்கள்
உள்ளன. அந்தத் திருநாமங்களைக் கூறியே இறைவனை அழைக்க வேண்டும்; திக்ரு செய்ய வேண்டும்.
அல்லாஹ்
என்று அழையுங்கள்! அல்லது ரஹ்மான் என்று அழையுங்கள்! நீங்கள் எப்படி அழைத்த போதும்
அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன என்று கூறுவீராக! உமது பிரார்த்தனையைச்
சப்தமிட்டும் செய்யாதீர்! மெதுவாகவும் செய்யாதீர்! இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட
வழியைத் தேடுவீராக! (அல்குர்ஆன்
17:110)
அல்லாஹ்வுக்குரிய அழகிய
திருநாமங்களில் அஹ்' என்றொரு
நாமம் இருக்கிறதா? நிச்சயமாக
இல்லை. அஹ் என்பது அல்லாஹ்வின் திருநாமம் இல்லை என்றால் இவர்கள் யாரை திக்ரு
செய்கிறார்கள்? சம்மந்தப்
பட்டவர்களிடம் இது பற்றிக் கேட்டால் அவர்கள் கூறுகின்ற விளக்கம் என்ன தெரியுமா?
அல்லாஹ் என்ற திருநாமத்தில் முதல்
எழுத்தையும், கடைசி எழுத்தையும்
சேர்த்து சுருக்கமாக அஹ்' என்று
கூறுகிறார்களாம். இப்படி அவர்கள் விளக்கம் தருகிறார்கள். அல்லாஹ்வின் பெயரை
இவ்வாறு திரிக்க அனுமதி இருக்கிறதா?
அல்லாஹ்வுக்கு
அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றின் மூலமே அவனிடம் பிரார்த்தியுங்கள்! அவனது
பெயர்களில் திரித்துக் கூறுவோரை விட்டு விடுங்கள்! அவர்கள் செய்து வந்ததற்காக
அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். (அல்குர்ஆன் 7:180)
'அல்லாஹ்' என்பதை
அஹ்' என்று திரித்துக் கூறும்
இவர்களைத் தன்னிடம் விட்டு விடுமாறும் அவர்கள் தண்டனை வழங்கப்படுவார்கள் என்றும்
இங்கே இறைவன் எச்சரிக்கிறான்.
இந்தக் கடுமையான எச்சரிக்கையை
அலட்சியம் செய்து விட்டு, இறைவனின்
திருநாமத்தில் விளையாடுவது திக்ராகுமா? என்று
சிந்தியுங்கள்!
அப்துல் காதிர் என்று பெயரிடப்பட்ட
ஒருவர் அர்' என்று அழைக்கப்படுவதை
ஏற்றுக் கொள்வதில்லை. இப்ராஹீம் என்று பெயரிட்டவர் இம்' என்று அழைக்கப்படும் போது ஆத்திரம் கொள்கிறார்.
சாதாரண மனிதர்களே இவ்வாறு இருக்கும்
போது யாவற்றையும் படைத்த கண்ணியத்திற்குரிய அல்லாஹ் இதை எப்படி ஏற்றுக் கொள்வான்? இந்த திக்ரு கண்டிப்பாக ஒழிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
இதற்கும், மார்க்கத்திற்கும் எந்தச்
சம்மந்தமும் இல்லை.
மேலும் அந்த ஹல்காவில் (சபையில்)
பாடப்படும் பாடல்கள் இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்க்கும் வகையிலும், இறைவனைக் கேலி செய்யும் வகையிலும் அமைந்துள்ளன.
ஹா! ஹா! ஹா! என்று சினிமா வில்லன்கள்
சிரிப்பது போன்று அர்த்தமில்லாத உளறல்களை திக்ரு என்று பாடுகின்றனர்.
'ஹாவா உலுவ்வன் வஹா ஹாஹா
ஹுபீஹி இலாஹ பாஹா பஹாஹுமன்
முதாஹுஸி ஹுதஹி ஹா ஹா ஹா.
எந்த அர்த்தமும் இல்லாது ஹாஹாஹீ ஹு ஹு
என்று உளறுவது தான் இறைவனை திக்ரு செய்யும் முறையா?
என் தலைவா! இந்த ஹல்காவில்
உள்ளவர்களின் பக்கம் உங்கள் பார்வையை வீசுங்கள்! அது கஷ்டத்தையும், சிரமத்தையும் அகற்றி விடும்.
என் தலைவா! உங்களுடன் எனக்குள்ள உறவு
காரணமாக எனக்கு வாரி வழங்குங்கள்!
என்றெல்லாம் பாடப்படுகிறது.
மவ்லானா மவ்லானா என்ற பாடலிலும் பாஸி
என்பவரைக் கடவுள் நிலையில் வைத்து அவரிடம் வேண்டுதல் செய்யப்படுகிறது.
அல்லாஹ்வை திக்ரு செய்கிறோம் என்ற
பெயரில் பாஸி என்பவரை அல்லாஹ்வாக்கும் யூதர்களின் சதித் திட்டம் இதிலிருந்து
தெரிகின்றது.
இந்த பாஸி என்பவரின் உளறல்களும்
பாடப்படுகின்றன.
அர்ஷ், குர்ஸீ மற்றும் ஸுரைய்யா என்னும் விண்மீனுக்கு மேலே
உள்ளவற்றையும் நான் கண்டேன். அவை எனது ஆணைக்கு அடிபணிகின்றன.
தாகத்துடன் வருபவனுக்கு நானே
புகட்டுகிறேன். என்னை அழைப்பவை இரட்சிக்கிறேன். அனைத்து விஷயங்களிலும் பரிந்துரை
செய்கிறேன்.
திக்கற்றவனே! நீ தாகத்துடனிருந்தால்
என்னை பாஸி என்று அழை! விரைந்து வருகிறேன்.
இவை யாவும் பாஸி என்பவரின் உளறல்கள்.
இறைவனை திக்ரு செய்கிறோம் என்று எண்ணிக் கொண்டு இந்த உளறலைத் தான் பாடுகின்றனர். அல்லாஹ்வின்
மார்க்கத்தைக் கிண்டல் செய்யும் பாடல்களும் இந்த ஹல்காவில் பாடப்படுகின்றன.
'உன்னை அனைவரும் நரகத்தை அஞ்சி வணங்குகிறார்கள். மறுமை
வெற்றியைப் பெரும் பாக்கியமாகக் கருதுகின்றனர். சொர்க்கத்தில் குடியிருக்கவும்
ஸல்ஸபீல் எனும் பானத்தை அருந்தவும் விரும்புகின்றனர். எனக்கோ, சொர்க்கம், நரகம்
பற்றி அக்கறையில்லை. என் நேசத்திற்கு எந்தப் பிரதிபலனையும் நான் வேண்ட மாட்டேன்.'
சொர்க்கத்தை வேண்டுமாறும், நரகத்திற்கு அஞ்சுமாறும் அல்லாஹ் கட்டளையிட்டிருப்பதைக்
கிண்டல் செய்யும் திமிர் பிடித்த இந்த வார்த்தைகளைத் தான் திக்ரு என்று
பாடுகின்றனர்.
முஹம்மதை நேசிக்கும் எவரும் தூங்கக்
கூடாது என்ற இந்த உளறலும் இந்தப் பாடல்களில் உள்ளது.
இந்தப் பாடல்களில் தமாஷுக்கும்
பஞ்சமில்லை.
'என் கையைப் பிடித்து என்னை விரும்பக் கூடியவர்களிடம் என்னை
விற்று விடுங்கள்! என் கையைப் பிடித்து கடை வீதிக்குக் கொண்டு போய் காதலர்களிடம்
என்னை விற்று விடுங்கள்'
இந்த ஹல்காவில் இந்தப் பாடல் வரிகளைப்
பாடும் போது அவர்களைக் கட்டாயமாக இழுத்துச் சென்று கடை வீதியில் விற்று விடுங்கள்!
இப்போது சொல்லுங்கள்! இந்த தமாஷும், வில்லன் சிரிப்பும், உளறல்களும் மனிதனைத் தெய்வமாக்கும் போக்கும் அதையொட்டி
நடக்கும் கூத்தும் இறைவனை திக்ரு செய்வதாகுமா? பார்த்தாலே பளிச்சென்று தெரியக் கூடிய இந்தக் கோமாளித்
தனங்கள் பள்ளிவாயிலில் அரங்கேற்றப்படுவது தான் கொடுமையிலும் கொடுமை.