நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 3:104)

சனி, ஜனவரி 21, 2012

மாமனிதர் நபிகள் நாயகம் (பாகம் 4)



மாமனிதர் நபிகள் நாயகம்

ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன்

பாகம் : 4 



ஒரு மனிதர் முதன் முதலாக நபிகள் நாயகத்தைச் சந்திக்க வந்தார். பொதுவாக மன்னர்கள் முன்னிலையில் நடுநடுங்கிக் கொண்டு தான் மக்கள் நிற்பார்கள். நபிகள் நாயகத்தையும் அது போல் கருதிக்கொண்டு உடல் நடுங்கிட வந்தார். 'சாதாரணமாக இருப்பீராக! உலர்ந்த இறைச்சியைச் சாப்பிட்டு வந்த குரைஷி குலத்துப் பெண்ணுடைய மகன் தான் நான்' என்று அவரிடம் கூறி அவரை சகஜ நிலைக்குக் கொண்டு வந்தார்கள். நூல் : இப்னு மாஜா 3303

உலகம் முழுவதும் அவர்களை மாபெரும் அதிகாரம் படைத்தவராகப் பார்க்கிறது. அவர்களோ, தம்மை ஏழைத்தாயின் புதல்வன் என்றே நினைக்கிறார்கள். இந்தப் பதவி, அதிகாரத்தால் தமக்கு எந்த மதிப்பும் இல்லை என்பதையும் தெளிவுபடுத்துகிறார்கள். பதவியைப் பயன்படுத்தி சொத்து சுகம் சேர்க்காவிட்டாலும் இது போன்ற கவுரவத்தையாவது அவர்கள் பெற்றிருக்கலாம். அதைக் கூட விரும்பாத எளிமை அவர்களுடையது.

ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தோழர்களுடன் நடந்து சென்றார்கள். அவர்களின் தலை மீது மட்டும் நிழல் படுவதைக் கண்டார்கள். தலையை உயர்த்திப் பார்த்த போது ஒரு துணிக் குடையால் அவர்களுக்கு நிழல் தரப்படுவதைக் கண்டார்கள். விடுங்கள் எனக் கூறி அந்தத்துணியை வாங்கி மடக்கி வைத்தார்கள். நானும் உங்களைப் போன்ற மனிதன் தான் எனவும் கூறினார்கள். நூல் : தப்ரானி

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதையும் மறுத்தால் உறுதியாக மறுப்பார்கள். எனவே தான் குடையாகப் பயன்பட்ட துணியை வாங்கி மடித்து வைத்துக் கொள்கிறார்கள். மறுத்தது மட்டுமின்றி குடையைப் பிடுங்கி வைத்துக் கொண்டதிருந்து இந்த மறுப்பு உளப்பூர்வமானது என்பதை அறியலாம். அது மட்டுமின்றி 'நானும் உங்களைப் போன்ற மனிதனே' என்று கூறி பதவி மற்றும் அதிகாரம் காரணமாக எந்த உயர்வும் இல்லை என்பதைப் பிரகடனம் செய்கிறார்கள்.

அவர்களின் எளிமைக்கு மற்றொரு சான்றைப் பாருங்கள்.அறுக்கப்பட்ட ஆட்டின் தோலை ஒரு இளைஞர் உரித்துக் கொண்டிருந்தார். அவரைக் கடந்து சென்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'ஒதுங்கிக் கொள்! உனக்கு எப்படி உரிப்பது என்று காட்டித் தருகிறேன்' என்றார்கள். தோலுக்கும், இறைச்சிக்குமிடையே தமது கையை அக்குள் வரை விட்டு உரித்தார்கள். நூற்கள் : அபூதாவூத் 157, இப்னுமாஜா 3170

ஒருவருக்கு ஆடு உரிக்கத் தெரியாவிட்டால் அவர்கள் கண்டு கொள்ளாமல் போய்க் கொண்டிருக்கலாம். அல்லது இப்படித் தான் உரிக்க வேண்டும் என்று வாயால் கூறலாம். போயான எந்தக் கவுரவமும் பார்க்காமல் தாமே ஆட்டுத் தோலை உரித்துக் காட்டிக் கற்றுக் கொடுத்தார்கள்.அவர்களின் மொத்த வாழ்க்கையே எளிமைக்கு உதாரணமாகத் திகழ்ந்திருக்கிறது எனலாம்.

வீதியில் செல்லும் போது சிறுவர்களைக் கண்டால் அவர்கள் முந்திக் கொண்டு சிறுவர்களுக்கு சலாம் கூறுவார்கள். நூல் : புகாரி 6247

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறுவர்களாகிய எங்களுடன் கலந்து பழகுவார்கள். எனது தம்பி அபூ உமைரிடம் 'உனது குருவி என்ன ஆனது?' என்று விசாரிக்கும் அளவுக்கு சிறுவர்களுடன் பழகுவார்கள். நூல் : புகாரி 6129

நான் அபீஸீனியாவிலிருந்து வந்தேன். அப்போது நான் சிறுமியாக இருந்தேன். வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஆடையை அவர்கள் எனக்கு அணிவித்தார்கள். அந்த வேலைப்பாடுகளைத் தொட்டுப் பார்த்து 'அருமை அருமை' என்று கூறினார்கள். அறிவிப்பவர் : உம்மு காலித் (ரலி), நூல் : புகாரி 3874நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் முதல் தொழுகையைத் தொழுதேன். பின்னர் அவர்கள் தமது குடும்பத்தாரிடம் சென்றார்கள். அவர்களுடன் நானும் சென்றேன். அப்போது எதிரில் சிறுவர்கள் சிலர் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரின் கன்னத்தையும் தடவிக் கொடுத்துக் கொண்டே சென்றனர். அறிவிப்பவர் : ஜாபிர் பின் ஸமூரா (ரலி)  நூல் : முஸ்லிம் 4297

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகச் சிறந்த நற்குணம் கொண்டவர்களாக இருந்தனர். ஒரு நாள் என்னை ஒரு வேலைக்கு அனுப்பினார்கள். நபிகள் நாயகம் கூறிய வேலையைச் செய்ய வேண்டும் என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டு 'அல்லாஹ்வின் மீது ஆணையாக போக மாட்டேன்' எனக் கூறினேன். நான் புறப்பட்டு கடை வீதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களுக்கருகில் வந்தேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என் பின்புறமாக எனது பிடரியைப் பிடித்தனர். அவர்களை நான் நோக்கிய போது அவர்கள் சிரித்தனர். 'அனஸ்! நான் கூறிய வேலையைச் செய்தாயா?' எனக் கேட்டார்கள். 'அல்லாஹ்வின் தூதரே! இதோ செய்கிறேன்' என்று கூறினேன். 'அல்லாஹ்வின் மீது ஆணையாக ஒன்பது வருடங்கள் அவர்களுக்கு நான் பணிவிடை செய்துள்ளேன். நான் செய்த ஒரு காரியம் குறித்து ஏன் இப்படிச் செய்தாய்?' என்றோ, நான் செய்யாத ஒரு காரியம் குறித்து இப்படிச் செய்திருக்க மாட்டாயா?' என்றோ அவர்கள் கடிந்து கெண்டதில்லை' என அனஸ் (ரலி) அறிவிக்கிறார். நூல் : முஸ்லிம் 4272

சிறுவர்கள் மீது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்பு செலுத்திய நிகழ்ச்சிகள் ஏராளம் உள்ளன. இத்தகைய பண்பாளர் தமது பதவியைப் பயன்படுத்தி மரியாதையையும், புகழையும் எதிர்பார்த்திருக்க முடியுமா?

வீட்டில் தமது செருப்பைத் தாமே தைப்பார்கள். தமது ஆடையின் கிழி சலையும் தாமே தைப்பார்கள். வீட்டு வேலைகளையும் செய்வார்கள். நூல் : அஹ்மத் 23756, 24176, 25039

தரையில் (எதுவும் விரிக்காமல்) அமர்வார்கள். தரையில் அமர்ந்து சாப்பிடுவார்கள். ஆட்டில் தாமே பால் கறப்பார்கள். அடிமைகள் அளிக்கும் விருந்தையும் ஏற்பார்கள். நூல் : தப்ரானி (கபீர்) 12494

மதீனாவுக்கு வெளியே உள்ள சிற்றூர் வாசிகள் இரவு நேரத்தில் தோல் நீக்கப்படாத கோதுமை ரொட்டியைச் சாப்பிட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைப்பார்கள். பாதி இரவு கடந்து விட்டாலும் அந்த விருந்தையும் நபிகள் நாயகம் (ஸல்) ஏற்றுக் கொள்வார்கள். நூல் : தப்ரானி (ஸகீர்) 41

அகழ் யுத்தத்தின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் மக்களுடன் சேர்ந்து அகழ் வெட்டினார்கள். மண் சுமந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வயிற்றை மண் மறைத்தது. நூல் : புகாரி 2837, 3034, 4104, 4106, 6620, 7236

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா வந்தவுடன் பள்ளிவாசலைக் கட்டிய போது அவர்களும் மக்களோடு சேர்ந்து கல் சுமந்தார்கள். நூல் : புகாரி 3906

இப்படி எல்லா வகையிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாதாரண மனிதராகத் தான் வாழ்ந்தார்கள். ஒரு தடவை கூடத் தமது பதவியைக் காரணம் காட்டி எந்த உயர்வையும் அவர்கள் பெற்றதில்லை.நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது பத்தாண்டு கால ஆட்சியில் தமது பதவிக்காக எந்த மரியாதையையும், புகழையும் மக்களிடம் எதிர்பார்க்கவில்லை. இப்பதவியை அடைவதற்கு முன்னர் அவர்களின் நிலை எதுவோ அதுவே அவர்கள் மிகப் பெரிய பதவியைப் பெற்ற பிறகும் அவர்களின் நிலையாக இருந்தது.

மிகவும் உயர்ந்த நிலையை அடைந்து விட்ட நேரத்தில் மக்களிடம் 'மக்கா வாசிகளின் ஆடுகளை அற்பமான கூக்காக மேய்த்தவன் தான் நான்' என்பதை அடிக்கடி அவர்கள் நினைவு கூர்ந்துள்ளனர். நூல் : புகாரி 2262, 3406, 5453

நான் அதிகாலையில் (என் தம்பி) அப்துல்லாஹ்வை நபிகள் நாயகத்திடம் தூக்கிச் சென்றேன். அவர்கள் ஸகாத் (பொதுநிதி) ஒட்டகங்களுக்குத் தமது கையால் அடையாளமிட்டுக் கொண்டிருக்கக் கண்டேன். அறிவிப்பவர் : அனஸ் பின் மாக் (ரலி) நூல் : புகாரி 1502, 5542

பொது நிதிக்குச் செலுத்தப்பட்ட ஒட்டகங்கள் மற்றவர்களின் ஒட்டகங் களுடன் கலந்து விடாமல் இருப்பதற்காக அவற்றுக்குத் தனி அடையாள மிடும் வழக்கத்தை நபிகள் நாயகம் (ஸல்) மேற்கொண்டிருந்தார்கள். இந்தப் பணியைத் தமது கைகளால் தாமே செய்துள்ளது அவர்களின் எளிமைக்கு மற்றொரு சான்றாக அமைந்துள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுகளவு கூட பெருமையையும், புகழையும் விரும்பியதில்லை என்பதற்கு மற்றொரு நிகழ்ச்சியைக் காணுங்கள்!

ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) கூறுகிறார்:நபிகள் நாயகத்துடன் நான் ஒரு போரில் பங்கெடுத்துக் கொண்டேன். என் ஒட்டகம் சண்டித்தனம் செய்து என்னைப் பின்தங்க வைத்தது. (முன்னே சென்று கொண்டிருந்த நபிகள் நாயகம்) என்னிடம் வந்து ஜாபிரா?' என்றனர். நான் ஆம் என்றேன். 'என்ன பிரச்சினை' என்று கேட்டார்கள். 'என் ஒட்டகம் சண்டித்தனம் செய்து என்னை பின்தங்கச் செய்து விட்டது' என்று கூறினேன். உடனே அவர்கள் தமது ஒட்டகத்திலிருந்து இறங்கி தமது குச்சியால் குத்தினார்கள். 'இப்போது ஏறிக் கொள்' என்றார்கள். நான் ஏறிக் கொண்டேன். அது விரைவாகச் சென்றதால் நபிகள் நாயகத்தை முந்தக் கூடாது என்பதற்காக அதைத் தடுத்து நிறுத்தலானேன். 'திருமணம் செய்து விட்டாயா?' என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். 'கன்னிப் பெண்ணா? விதவைப் பெண்ணா?' எனக் கேட்டார்கள். விதவையைத் தான் என்று நான் கூறினேன். '(நீர் இளைஞராக இருப்பதால்) கன்னிப் பெண்ணை மணந்திருக்கலாமே! இதனால் இருவரும் மகிழ்ச்சியாக இருப்பீர்களே' என்றனர். 'எனக்குச் சகோதரிகள் உள்ளனர். அவர்களைப் பராமரிக்கக் கூடிய ஒரு பெண் வேண்டும் என்பதற்காக விதவையை மணந்து கொண்டேன்' என்று நான் கூறினேன். 'இதோ ஊருக்குள் நுழையப் போகிறாய். இனி மகிழ்ச்சி தான்' என்று கூறி விட்டு, 'உனது ஒட்டகத்தை என்னிடம் விற்கிறாயா?' என்று கேட்டார்கள். நான் சரி என்றேன். நான்கு தங்கக் காசுகளுக்கு அதை வாங்கிக் கொண்டனர். பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்கு முன் சென்று விட்டனர். நான் காலையில் போய்ச் சேர்ந்தேன். பள்ளிவாசலுக்கு வந்த போது பள்ளிவாசலின் வாயிலில் நபிகள் நாயகம் நின்றனர். 'இப்போது தான் வருகிறாயா?' என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். 'உனது ஒட்டகத்தை விட்டு விட்டு உள்ளே போய் இரண்டு ரக்அத்கள் தொழு' என்றார்கள். நான் உள்ளே போய் தொழுதேன். எனக்குத் தர வேண்டியதை எடை போட்டுத் தருமாறு பிலாலிடம் கூறினார்கள். பிலால் அதிகமாக எடை போட்டுத் தந்தார். அதைப் பெற்றுக் கொண்டு நான் புறப்படலானேன். 'ஜாபிரைக் கூப்பிடுங்கள்' என்று நபிகள் நாயகம் கூறினார்கள். ஒட்டகத்தைத் திருப்பித் தருவதற்குத் தான் அழைக்கிறார்கள் என்று நினைத்தேன். அது எனக்குக் கவலையாக இருந்தது. 'உமது ஒட்டகத்தையும் எடுத்துக் கொள்வீராக! அதற்காக நாம் அளித்த கிரயத்தையும் வைத்துக் கொள்வீராக' என்றனர். புகாரி: 2097, 2309, 2861, 2967, 5245, 5247, 5667

ஜாபிர் என்பவர் முக்கியமான பிரமுகர் அல்ல. ஒரு இளைஞர். அவரது ஒட்டகம் சண்டித்தனம் செய்து உட்கார்ந்து விட்டதைக் கவனித்த நபிகள் நாயகம் (ஸல்) யாரையாவது அனுப்பி அவருக்கு உதவுமாறு கூறியிருக்கலாம். அவ்வாறு செய்யாமல் அவரை நோக்கி தாமே வருகிறார்கள். வந்தவுடன் ஜாபிரா? என்று கேட்கிறார்கள். சாதாரணமானவரையும் பெயர் சொல்லிக் கூப்பிடும் அளவுக்கும், பெயரைத் தெரிந்து வைத்திருக்கும் அளவுக்கும் அவர்கள் மக்களுடன் நெருங்கிப் பழகி வந்தார்கள் என்பது தெரிகிறது.

தமது ஒட்டகத்திலிருந்து இறங்கி அவரது ஒட்டகத்தை எழுப்பி விடுகிறார்கள். எழுப்பி விட்டது மட்டுமின்றி அவருடைய பொருளாதார நிலை, குடும்ப நிலவரம் ஆகிய அனைத்தையும் சாவகாசமாக விசாரிக்கிறார்கள். அவரது ஒட்டகம் எதற்கும் உதவாத ஒட்டகம் என்பதை அறிந்து கொண்டு அவர் வேறு தரமான ஒட்டகத்தை வாங்குவதற்காக அதை விலைக்குக் கேட்கிறார்கள். அவர் மற்றவர்களுடன் சேரும் வரை கூடவே வந்து விட்டு அதன் பின்னர் வேகமாக அவர்கள் புறப்படுகிறார்கள்.

ஊர் சென்றதும் தாம் கொடுத்த வாக்குப் படி ஒட்டகத்திற்குரிய விலையைக் கொடுப்பதற்காக இவரை எதிர் பார்த்துக் காத்திருக் கிறார்கள். தாம் சொன்ன படி அதற்கான விலையையும் கொடுத்து விட்டு அந்த ஒட்டகத்தையும் அவரிடம் கொடுத்து விடுகிறார்கள்.

இது அவர்களின் வள்ளல் தன்மைக்கும், அவர்கள் ஆட்சி எவ்வளவு செழிப்பாக இருந்தது என்பதற்கும், தேவையறிந்து தாமாகவே உதவி செய்யும் அளவுக்கு அவர்கள் மக்கள் நலனில் அக்கரை செலுத்தினார்கள் என்பதற்கும் சான்றாக உள்ளது. இவ்வளவு எளிமையாகவும், மிகச் சாதாரண மனிதரைப் போன்றும் நடந்து கொண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஆட்சி, அதிகாரத்தைப் பயன்படுத்தி புகழ் சம்பாதித்திருப்பார்களா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாய்ந்து கொண்டு சாப்பிட்டதையோ, அவர்களுக்குப் பின்னால் இரண்டு பேர் அடியொற்றி நடப்பதையோ எவரும் பார்த்ததில்லை என்று அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) கூறுகிறார். நூற்கள்: அபூதாவூத் 3278, இப்னுமாஜா 240 அஹ்மத் 6262

மிகவும் சாதாரண பொறுப்பில் உள்ளவர்கள் கூட தனியாக எங்கும் செல்வதைப் பார்க்க முடிவதில்லை. குறைந்த பட்சம் முன்னால் இருவர், பின்னால் இருவர் இல்லாமல் இவர்கள் வெளியே கிளம்ப மாட்டார்கள். ஆனால், நபிகள் நாயகத்தை அடியொற்றி இரண்டு பேர் சென்றதே கிடையாது.பலருடன் செல்ல வேண்டிய வேலை இருந்தால் அவர்களும் சேர்ந்து சென்றிருக்கிறார்கள். நபிகள் நாயகத்தின் பாதுகாப்புக்கோ, பகட்டுக்கோ குறைந்தது இருவர் கூட சென்றதில்லை என்பது நபிகள் நாயகத்தின் தன்னடக்கத்திற்கும், துணிச்சலுக்கும் சான்றாக உள்ளது.

'
நீங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அவையில் அமர்ந்ததுண்டா?' என்று ஜாபிர் பின் ஸமுரா (ரலி) இடம் கேட்டேன். அதற்கவர் 'ஆம்' என்றார். மேலும் தொடர்ந்து 'வைகறைத் தொழுகை முடிந்ததும் சூரியன் உதிக்கும் வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுத இடத்திலேயே அமர்ந்திருப்பார்கள். சூரியன் உதித்த பின்னர் எழுவது தான் அவர்களின் வழக்கம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு அமர்ந்திருக்கும் போது நபித்தோழர்களும் அமர்ந்திருப்பார்கள். அப்போது அறியாமைக் காலத்தின் (இஸ்லாத்தை ஏற்காத காலத்தின்) தமது நடவடிக்கைகள் குறித்து நபித்தோழர்கள் பேசுவார்கள். அதை நினைத்துச் சிரிப்பார்கள். இதைப் பார்க்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் புன்னகைப்பார்கள். நூல் : முஸ்லிம் 1074, 4286

இந்த நிகழ்ச்சியைக் கவனியுங்கள்! மாபெரும் வல்லரசின் அதிபரும், ஆன்மீகத் தலைவருமான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அவையில் அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சி இங்கே கூறப்படுகிறது.  தொழுகையை முடித்ததும் மக்கள் தமது அறியாமைக் காலத்தில் செய்த கிறுக்குத்தனங்களையும், மூடச் செயல்களையும் ஒருவருக் கொருவர் பேசிச் சிரிப்பார்கள்! நபிகள் நாயகம் (ஸல்) அமர்ந்தி ருக்கிறார்களே என்பதற்காக மௌனமாக இருக்க மாட்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களுக்கு ஏதேனும் கூறும் போது மிகவும் கவனமாகச் செவிமடுக்கும் அவர்களின் தோழர்கள் சாதாரணமாக நபிகள் நாயகம் (ஸல்) அமர்ந்திருக்கும் போது இயல்பாகவே நடந்து கொள்வார்கள். நபிகள் நாயகத்துக்கு மரியாதை தரக் கூடாது என்பதற்காக அவர்கள் இவ்வாறு நடக்கவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) கட்டளையிட்டால் உயிரையும் கொடுக்க அவர்கள் தயாராக இருந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்கு முன்னால் சாதாரணமாக அமர்ந்தால் போதுமானது என்று பயிற்றுவித்ததன் அடிப்படையிலேயே அவர்கள் இவ்வாறு நடந்து கொண்டனர்.மழலைகளுக்குப் பாடம் நடத்தும் ஆசிரியர் கூட பாடம் நடத்தாத நேரங்களில் தமக்கு முன்னால் மாணவர்கள் இவ்வாறு நடந்து கொள்வதை ஏற்க மாட்டார். தனக்குக் கீழே உள்ளவர் தன் முன்னே இவ்வாறு நடப்பதை உயர் அதிகாரி விரும்ப மாட்டார். எந்த ஒரு ஆன்மீகத் தலைவரின் முன்னிலையிலும் அவரது சீடர்கள் இவ்வாறு நடந்து கொள்ள மாட்டார்கள். நடக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இந்த மாமனிதரின் உள்ளம் எந்த அளவுக்குப் பக்குவப்பட்டிருந்தால் அவரால் இவ்வாறு நடந்து கொள்ள முடியும்!  நம்மை விடச் சிறியவர்கள், நமக்குக் கீழே இருப்பவர்கள் நம் முன்னே இப்படி நடந்து கொள்ள நாம் அனுமதிக்க மாட்டோம். அப்படியே நடந்து கொண்டால் நமது மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள பக்குவமாக நாம் அந்த இடத்திருந்து நழுவி விடுவோம்.

சராசரி மனிதர்களாகிய நமக்கே இது மரியாதையைப் பாதிக்கும் செயலாகத் தெரிகிறது. இந்த மாமனிதரோ சிரித்துப் பேசிக் கொண்டிருக்கும் சகாக்களை விட்டு நழுவாமல் அங்கேயே இருக்கிறார்கள். அது மட்டுமின்றி மழலைகள் செய்யும் சேட்டைகளைக் கண்டு மகிழும் பெற்றோரைப் போல் தாமும் அந்த மக்களுடன் சேர்ந்து புன்னகை சிந்துகிறார்கள்.  ஒரு நாள், இரு நாட்கள் அல்ல. இது அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சியாக இருந்துள்ளது.

ஆன்மீகத் தலைவராகவும், மாபெரும் சாம்ராஜ்ஜியத்தின் அதிபராகவும் இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த உயர் பண்பின் காரணமாகவே மாமனிதர் எனக் குறிப்பிடப்படுகிறார்கள்.

நாகரீகம் வளர்ந்து விட்ட இந்தக் காலத்தில் கூட ஆன்மீகத் தலைவரோ, அரசியல் தலைவரோ, பெரிய தலைவரோ, சிறிய தலைவரோ இவ்வளவு சகஜமாக சாதாரண மக்களுடன் நடப்பதில்லை என்பதைக் கவனிக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அப்பழுக்கற்ற நம்பகத் தன்மை நம்மைப் பிரமிப்பில் ஆழ்த்துகிறது.

மற்றொரு நிகழ்ச்சியைப் பாருங்கள்!நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நடந்து செல்லும் வழியில் சிலர் அம்பெய்யும் போட்டி நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'இஸ்மாயீன் வழித் தோன்றல்களே! அம்பெய்யுங்கள்! உங்கள் தந்தை இஸ்மாயீல் அம்பெய்பவராக இருந்தார். நான் இந்த அணியில் சேர்ந்து கொள்கிறேன்' என்று கூறினார்கள். மற்றொரு அணியினர் அம்பெய்வதை உடனே நிறுத்திக் கொண்டனர். ஏன் நிறுத்தி விட்டீர்கள்? என்று அவர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டனர். 'நீங்கள் அந்த அணியில் இருக்கும் போது உங்களுக்கு எதிராக நாங்கள் எப்படி அம்பெய்வோம்?' என்று அவர்கள் கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'நான் உங்கள் அனைவருக்கும் பொதுவாக இருக்கிறேன். எனவே நீங்கள் அம்பெய்யுங்கள்' என்றார்கள். நூல் : புகாரி 2899, 3507, 3373

இரண்டு அணிகள் அம்பெய்து விளையாட்டில் ஈடுபடும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டு கொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டிருக்கலாம். அவ்வாறு ஒதுங்காமல் அவர்களை ஊக்குவிக்கிறார்கள். தாமும் ஒரு அணியில் சேர்ந்து சாதாரண மனிதர் நிலைக்கு இறங்கி வருகிறார்கள். எதிரணியினரின் மனம் ஒப்பாததன் காரணமாகவே அதிருந்து விலகிக் கொள்கின்றனர்.

மற்றொரு நிகழ்ச்சியைப் பாருங்கள்.மிக்தாத் (ரலி) என்னும் நபித்தோழர் அறிவிக்கிறார்கள்.நானும், எனது இரு நண்பர்களும் பசியின் காரணமாக செவிகள் அடைத்து, பார்வைகள் மங்கிய நிலையில் (மதீனா) வந்தோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்களிடம் எங்களின் நிலையை எடுத்துச் சொன்னோம். எங்களை ஏற்று தங்க வைத்து உணவளிக்க யாரும் முன் வரவில்லை. பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நாங்கள் சென்றோம். அவர்கள் எங்களைத் தமது வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கிருந்த மூன்று ஆடுகளைக் காட்டி 'இந்த ஆடுகளில் பால் கறந்து நம்மிடையே பங்கு வைத்துக் கொள்வோம்' என்று கூறினார்கள். எனவே நாங்கள் பால் கறந்து எங்களில் ஒவ்வொருவரும் தமது பங்கை அருந்தி விட்டு நபிகள் நாயகத்தின் பங்கை எடுத்து வைத்து விடுவோம்.  அவர்கள் இரவில் வந்து உறங்குபவரை எழுப்பாத வகையிலும், விழித்திருப்பவருக்குக் கேட்கும் வகையிலும் ஸலாம் கூறுவார்கள். பின்னர் பள்ளிவாசல் சென்று தொழுது விட்டு தமது பங்கை அருந்துவார்கள்.

ஒரு நாள் என்னிடம் ஷைத்தான் வந்து விட்டான். நான் என் பங்கை அருந்தினேன். 'முஹம்மது அவர்கள் அன்ஸார்களிடம் செல்கிறார்கள்; அன்ஸார்கள் நபிகள் நாயகத்தைக் கவனிப்பார்கள்; எனவே இந்த மிடறுகள் அவர்களுக்குத் தேவைப்படாது' என்று எனக்குள் கூறிக் கொண்டு நபிகள் நாயகத்திற்குரிய பங்கையும் அருந்தி விட்டேன்.  அது வயிற்றுக்குள் சென்றதும் தப்பிக்க எந்த வழியும் இல்லை என்பதை விளங்கிக் கொண்டேன். 'நீ என்ன காரியம் செய்து விட்டாய்! முஹம்மது அவர்களின் பங்கை யும் அருந்தி விட்டாயே! அவர்கள் வந்து பார்க்கும் போது தமது பாலைக் காணாவிட்டால் உனக்கு எதிராகப் பிரார்த்தனை செய்து விடுவார்களே! அவ்வாறு பிரார்த்தனை செய்து விட்டால் நீ அழிந்து விடுவாயே! உனது இவ்வுலக வாழ்வும், மறுமை வாழ்வும் நாசமாகி விடுமே' என்று ஷைத்தான் எனக்குள் பலவாறாக எண்ணங்களை ஏற்படுத்தினான்.

என்னிடம் ஒரு போர்வை இருந்தது. அதனால் காலைப் போர்த்தினால் தலை தெரியும். தலையைப் போர்த்தினால் கால் தெரியும். எனக்குத் தூக்கமும் வரவில்லை. எனது இரு நண்பர்களும் நான் செய்த காரியத்தைச் செய்யாததால் தூங்கி விட்டார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) வந்தார்கள். வழக்கம் போல் ஸலாம் கூறினார்கள். பள்ளிவாசலுக்குச் சென்று தொழுதார்கள். பின்னர் தமது பானத்தை நோக்கி வந்தார்கள். அதைத் திறந்து பார்த்ததும் அதில் எதையும் காணவில்லை. உடனே தமது தலையை வானத்தை நோக்கி உயர்த்தினார்கள் 'இப்போது பிரார்த்தனை செய்யப் போகிறார்கள். நான் அழியப் போகிறேன்' என்று நினைத்தேன். அவர்கள் 'இறைவா! எனக்கு உணவளித்தவருக்கு நீ உணவளிப்பாயாக! எனக்குப் பருகத் தந்தவருக்கு நீ பருகச் செய்வாயாக!' என்று வழக்கம் போல் பிரார்த்தனை செய்தார்கள்.நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பசியோடு இருப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் போர்வையை இடுப்பில் கட்டிக் கொண்டு, கத்தியை எடுத்துக் கொண்டு ஆடுகளை நோக்கிச் சென்றேன். அந்த ஆடுகளில் நன்கு கொழுத்ததை அறுத்து நபிகள் நாயகத்திற்கு அளிக்க வேண்டும் என்று நினைத்தேன்.

ஆனால் அந்த ஆடு மடியில் பால் சுரந்து நின்றது. மற்ற ஆடுகளும் மடியில் பால் சுரந்து நின்றன. உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குடும்பத்தினரின் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு நுரை பொங்கும் அளவுக்கு பால் கறந்தேன். அதை நபிகள் நாயகத்திடம் கொண்டு சென்றேன். 'உங்கள் பங்கை நீங்கள் பருகி விட்டீர்களா?' என்று அவர்கள் கேட்டார்கள். 'அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் பருகுங்கள்' என்றேன். அவர்கள் அருந்திவிட்டு மீதியைத் தந்தார்கள்.

'
அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் பருகுங்கள்' என்று மீண்டும் கூறினேன். மீண்டும் அருந்திவிட்டு என்னிடம் தந்தார்கள். அவர்களின் பசி அடங்கியது என்பதை அறிந்து கொண்டதும், அவர்களின் பிரார்த்தனைக்குரியவனாக நான் ஆகிவிட்டதை உணர்ந்த போது, நான் விழுந்து விழுந்து சிரித்தேன். நான் கீழே விழுந்து விடுவேனோ என்ற அளவுக்குச் சிரித்தேன். 'மிக்தாதே! ஆடையைச் சரிப்படுத்துவீராக' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

'
அல்லாஹ்வின் தூதரே! இப்படி இப்படி நடந்து விட்டேன்' என்று அவர்களிடம் விளக்கினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 'இது அல்லாஹ்வின் அருள் தவிர வேறில்லை. இதை முன்பே என்னிடம் தெரிவித்திருக்கக் கூடாதா? நமது நண்பர்கள் இருவரையும் எழுப்பி அவர்களுக்கும் பருகக் கொடுத்திருக்கலாமே' என்றார்கள்.  நூல் : முஸ்லிம் 3831

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மாபெரும் சாம்ராஜ்யத்தின் அதிபராக இருக்கும் நிலையிலும் ஆட்டில் கறக்கும் பாலே அவர்களின் உணவாக இருந்ததுள்ளது அவர்களின் தூய வாழ்க்கைக்குச் சான்றாகவுள்ளது.  தம்மிடம் வசதி இல்லாத நிலையிலும் மூன்று நபர்களைப் பல நாட்கள் தமது பொறுப்பில் சுமந்து கொண்டது அவர்களின் வள்ளல் தன்மைக்குச் சான்றாகவுள்ளது.தமது ஆடுகளில் கறந்த பான் ஒரு பகுதியைத் தமக்குத் தராமல் அருந்தியவர்கள் மீது அவர்களுக்குக் கோபமே வரவில்லை என்பது இந்த மாமனிதரின் மகத்தான நற்பண்புகளைக் காட்டுகிறது.  'எனக்கு உணவளித்தவர்களுக்கு நீ உணவளிப்பாயாக' என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்தது தான் அவர்களின் அதிகபட்ச கண்டனமாக இருந்தது. நபிகள் நாயகத்திற்கு உணவளித்தால் இறைவன் நமக்கு உணவளிப்பான் என்று ஆர்வமூட்டினார்களே தவிர யார் தனது பங்கை அருந்தியவர் என்று கூட விசாரிக்கவில்லை.

தம்மைப் பட்டினி போட்டவர்களை இவ்வளவு மென்மையாக நல்வழிப்படுத்தியது அவர்களின் மகத்தான நற்குணத்திற்கு மற்றொரு சான்றாகவுள்ளது.  தமக்கு உணவளித்தவருக்காக நபிகள் நாயகம் (ஸல்) பிரார்த்தனை செய்து விட்டார்கள். எனவே, எப்படியாவது அவர்களுக்கு உணவ ளித்து அவர்களின் பிரார்த்தனையைப் பெற வேண்டும் என்று மிக்தாத் (ரலி) எண்ணி நபிகள் நாயகத்திற்குச் சொந்தமான ஆட்டை அறுக்கத் துணிகிறார். எவ்வளவு இடையூறு செய்தாலும், இழப்பை ஏற்படுத்தி னாலும் நபிகள் நாயகத்திற்குக் கோபமே வராது என்று மற்றவர்கள் நினைக்குமளவுக்கு அவர்களின் பண்பாடு அமைந்துள்ளது.

இரவில் பால் கறந்து விட்டதால் ஆட்டில் மீண்டும் கறக்க முடியாது என்று எண்ணியே அவர் ஆட்டை அறுக்கத் துணிகிறார். ஆனால் அல்லாஹ்வின் அருளால் மூன்று ஆடுகளின் மடிகளிலும் பால் சுரந்திருப்பதைக் கண்டு அவர் தனது எண்ணத்தை மாற்றிக் கொள்கிறார். செய்த தவறையும் செய்து விட்டு அவர்கள் முன்னிலை யில் விழுந்து விழுந்து இந்த நபித் தோழரால் சிரிக்க முடிகிறது. அப்போது கூட இந்த மாமனிதருக்குக் கோபம் வரவில்லை. அவர் சிரிக்கும் போது ஆடை விலகுவதை மட்டுமே சுட்டிக் காட்டுகிறார்கள்.

வழக்கத்துக்கு மாறாக அல்லாஹ்வின் அருளால் மீண்டும் ஒரு முறை பால் கறக்கப்பட்டு தமக்குத் தரப்படுகிறது என்பதை அறிந்தவுடன் மற்ற இரு நண்பர்களையும் எழுப்பியிருக்கக் கூடாதா? என்று அக்கறையுடன் விசாரித்தது அவர்களின் நற்பண்புக்கு மற்றொரு எடுத்துக்காட்டு.

ஆட்சித் தலைவராகவும், ஆன்மீகத் தலைவராகவும் இருந்து கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) நடந்து கொண்டது போல் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களால் கூட நடக்க முடியுமா? என்று கற்பனை செய்து பார்த்தால் தான் இந்த மாமனிதரின் மகத்துவம் நமக்கு விளங்கும்.  யார் என்று தெரியாதவர்களைப் பல நாட்கள் தங்க வைத்து கவனிக்க மாட்டோம். நமது உணவையும் சாப்பிட்டு விட்டு நம்மைப் பட்டினி போட்டால் சும்மா இருக்க மாட்டோம். செய்வதையும் செய்து விட்டு நம் முன்னே சிரித்தால் அதையும் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம். நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களிடமே காணப்பட முடியாத இந்தப் பண்பாடு மாபெரும் சாம்ராஜ்யத்தின் அதிபராகிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் காணப்படுவதால் தான் உலகம் அவர்களை மாமனிதர் எனப் போற்றுகிறது.

'
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நம்மோடு இன்னும் எவ்வளவு காலம் இருப்பார்கள் என்பதை நாம் அறிய மாட்டோம். எனவே அவர்கள் நம்மால் சிரமப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்' என்று அப்பாஸ் (ரலி) மக்களிடம் கூறினார். பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து 'அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு நிழல் தரும் கூடாரத்தைத் தனியாக நாங்கள் அமைத்துத் தருகிறோமே' என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'மக்கள் என் மேலாடையைப் பிடித்து இழுத்த நிலையிலும், எனது பின்னங்காலை மிதித்த நிலையிலும் அவர்களுடன் கலந்து வாழவே நான் விரும்புகிறேன். அவர்களிடமிருந்து அல்லாஹ் என்னைப் பிரிக்கும் வரை (மரணிக்கும் வரை) இப்படித் தான் இருப்பேன்' எனக் கூறினார்கள். நூல் : பஸ்ஸார் 1293

மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களுடன் கலந்து மக்களில் ஒருவராக இருப்பதை தாமாக வேண்டி விரும்பியே தேர்வு செய்து கொண்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களுக்கு அதிகச் சுதந்திரம் கொடுத்ததால் மக்களால் அவர்களுக்குப் பலவிதக் கஷ்டங்கள் ஏற்பட்டன என்பதை முன்னர் நாம் விளக்கியுள்ளோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனியாகத் தங்கும் வகையில் ஒரு இடத்தை ஏற்பாடு செய்தால் மக்கள் சகஜமாக அவர்களை நெருங்க முடியாது. இதனால் அவர்களின் சிரமம் குறையும் என அவர்கள் மீது அக்கரை கொண்ட சில நபித்தோழர்கள் நினைக்கிறார்கள்.ஆனால், நபிகள் நாயகமோ வேண்டி விரும்பியே இதைத் தேர்வு செய்திருப்பதாகக் கூறி விடுகிறார்கள். பதவியோ, அதிகாரமோ அவர்களை எள்ளளவும் பாதித்து விடவில்லை என்பதற்கு இதுவே சிறந்த சான்றாக உள்ளது.  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த அளவுக்கு மக்களோடு மக்களாகப் பழகினார்கள் என்றால் குறைந்த பட்சம் தினசரி ஐந்து தடவை யார் வேண்டுமானாலும் அவர்களைச் சந்தித்து விடலாம் என்ற அளவுக்கு மக்களோடு கலந்திருந்தார்கள்.

இஸ்லாத்தின் முக்கியமான கடமைகளில் ஐந்து நேரத் தொழுகை முதன்மையானது என்பதை அனைவரும் அறிவர். அந்தத் தொழுகையைப் பள்ளிவாசலில் கூட்டாக நிறைவேற்றுமாறு இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தக் கூட்டுத் தொழுகையை நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் அவர்கள் தாம் தலைமையேற்று நடத்தி வந்தார்கள். தினமும் பள்ளி வாசலுக்கு ஐந்து தடவை வருவார்கள். தினமும் ஐந்து தடவை மக்களைச் சந்திப்பார்கள். நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் கடைசிக் கட்டத்தில் இஸ்லாத்தை ஏற்றவர் கூட அவர்களை நூறு தடவைக்குக் குறையாமல் பார்த்திருப்பார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா வந்து பத்து ஆண்டுகள் கூட்டுத் தொழுகை நடத்தினார்கள். பத்து ஆண்டுகளும் விடாமல் பள்ளிவாசல் வந்தவர் நபிகள் நாயகத்தை 18 ஆயிரம் தடவை பார்த்திருக்க முடியும்.  வெளியூர்ப் பயணம் சென்ற காலத்தைக் கழித்தால் கூட பெரும்பாலானவர்கள் பதினைந்தாயிரம் தடவைக்கு மேல் நபிகள் நாயகத்தைப் பார்த்திருக்கிறார்கள்.

உலக வரலாற்றில் இவ்வளவு அதிகமான சந்தர்ப்பங்களில் மக்களைச் சந்தித்த ஒரே தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தவிர வேறு எவரும் இருக்க முடியாது என்பதில் சந்தேகம் இல்லை. மாபெரும் ஆன்மீகத் தலைவராக இருந்த நபிகள் நாயகம் (ஸல்) பார்வையில் சாமான்யரும், பிரமுகரும் சமமாகவே தென்பட்டனர். அவர் களின் வரலாற்றில் இதற்கு ஆயிரக்கணக்கான சான்றுகளைக் காணலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பள்ளிவாசலைக் கூட்டிப் பெருக்கிச் சுத்தம் செய்யும் வேலையை ஒரு கறுப்பு நிற மனிதர் செய்து வந்தார். அவர் திடீரென இறந்து விட்டார். அவரை அற்பமாகக் கருதிய நபித் தோழர்கள் அவரது மரணத்தை நபிகள் நாயகத்திடம் தெரிவிக்காததால் அவர் இறந்ததை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறியவில்லை. ஒரு நாள் அவரைப் பற்றி நினைவு வந்து 'அவர் எங்கே?' என விசாரித்தனர். அவர் இறந்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. 'அப் போதே எனக்கு இதைத் தெரிவித்திருக்க மாட்டீர்களா?' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டனர். பின்னர் 'அவரது அடக்கத் தலத்தை எனக்குக் காட்டுங்கள்' என்றனர். அவரது அடக்கத் தலத்தைக் காட்டி யதும் அங்கே சென்று அவருக்காகப் பிரார்த்தனை செய்தார்கள். நூல் : புகாரி 1337

'
இறந்தவர் பள்ளிவாசலைக் கூட்டிப் பெருக்குபவர் என்பதால், இவரைப் போன்ற மதிப்பற்றவர்களின் மரணத்தை ஏன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் தெரிவிக்க வேண்டும்?' என எண்ணி நபித் தோழர்கள் அவரை அடக்கம் செய்கின்றனர். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இதை ஏற்க முடியவில்லை. 'எனக்கு ஏன் அப்போதே தெரிவிக்கவில்லை?' எனக் கேட்கிறார்கள். அறிவித்திருந்தால் அவரை நல்லடக்கம் செய்யும் பணியில் நானும் ஈடுபட்டிருப்பேனே என்ற எண்ணத்தில் இவ்வாறு கேட்கிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒப்புக்காக இவ்வாறு கூறவில்லை. மாறாக அவரை நல்லடக்கம் செய்த இடம் எதுவென விசாரித்து அறிந்து அங்கே சென்று அவருக்காகப் பிரார்த்தனை செய்வதைக் காண்கிறோம். அவர்களைப் பொருத்த வரை பிரமுகர்களும், சாமான்யர்களும் சமமாகத் தோன்றியதால் தான் இவ்வாறு அவர்களால் நடந்து கொள்ள முடிந்தது.

அனஸ் (ரலி) அவர்கள் நபிகள் நாயகத்தின் பணியாளராக இருந்தார். அவரது பாட்டி முளைக்கா (ரலி) தமது இல்லத்துக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை விருந்துக்கு அழைத்து வருமாறு கூறினார். அங்கே சென்று அவர் அளித்த விருந்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்கொண்டார்கள். முளைக்கா (ரலி) வசதி படைத்தவர் அல்லர். சமூகத்தில் செல்வாக்குப் பெற்றவரும் அல்லர். மிக மிகச் சாதாரண நிலையில் உள்ளவர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கே சாப்பிட்டு முடித்ததும் அங்கேயே தொழுதார்கள். தொழுவதற்குத் தகுதியான பாய் கூட அவ்வீட்டில் இருக்கவில்லை. நீண்ட நாட்கள் பயன் படுத்தியதால் கறுப்பு நிறமாக மாறிவிட்ட பாய் தான் அங்கே இருந்தது. அதில் தான் தொழுதார்கள். நூல் : புகாரி 380, 860

பாய் கூட இல்லாத அளவுக்குப் பரம ஏழை தான் முளைக்கா (ரலி). அவர் அளித்த விருந்து எத்தகையதாக இருந்திருக்கும் என்பதை இதிலிருந்து ஊகிக்கலாம். நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் கூட ஒதுக்கித் தள்ளும் நிலையில் இருந்த ஏழைக் குடிசையின் விருந்தை ஆட்சித் தலைவராகவும், ஆன்மீகத் தலைவராகவும் உள்ள நபிகள் நாயகம் (ஸல்) ஏற்றுள்ளனர். அவர்கள் எல்லா மனிதர்களின் உணர்வுகளையும் மதிப்பவர்களாக இருந்தார்கள். சாதாரண மனிதனும் கூட தன்னை விட அற்பமானவர்களை ஒதுக்கித் தள்ளுவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் போது மிக உயர்ந்த நிலையில் இருந்த இந்த மாமனிதர் இதிலும் வெற்றி பெறுகிறார்கள்.

ஆன்மீகத் தலைவர்களானாலும், அரசியல் தலைவர்களானாலும், அதிகாரம் படைத்தோராக இருந்தாலும் பிரமுகர்களையும், சாமானியர்களையும் பாரபட்சமாக நடத்துவதைக் காண்கிறோம்.  அதிகாரம் படைத்தோர், அரசியல்வாதிகள் இவ்வாறு நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது என்றாலும், 'நாங்கள் பக்குவம் பெற்ற வர்கள், துறந்தவர்கள்' என்றெல்லாம் அவர்கள் தம்மைப் பற்றி கூறிக் கொள்வதில்லை. எனவே அவர்கள் சாமான்யர்களையும், பிரமுகர் களையும் பாரபட்சமாக நடத்துவதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

'
மற்ற மனிதர்களை விட தாங்கள் பண்பட்டவர்கள்; பக்குவம் அடைந்தவர்கள்' என்று ஆன்மீகத் தலைவர்கள் தம்மைப் பற்றி அறிவித்துக் கொள்கிறார்கள். இது உண்மை என்றால் அவர்களின் பார்வையில் பிரமுகர்களும், சாமான்யர்களும் சமமாகவே தென்பட வேண்டும்.

ஆனால் இவ்வாறு பாரபட்சம் காட்டுவதில் ஆன்மீகத் தலைவர் என்று தம்மைக் கூறிக் கொள்வோர், மற்றவர்களை விட மிஞ்சி நிற்பதை நாம் சர்வ சாதாரணமாகக் காணலாம். அவர்களின் கதவுகள் அதிபர்களுக்கும், அமைச்சர்களுக்கும், கோடீஸ்வரர்களுக்கும், புகழ் பெற்றவர்களுக்கும் தான் திறக்கப்படுகின்றன. மற்ற சாமான்யர்களுக்குக் கூட்டத்தோடு கூட்டமாக தர்ம தரிசனம் தான் கிடைக்கின்றது.

அது போல ஆன்மீகத் தலைவர்கள் எத்தகைய மக்களைத் தேடிச் செல்கிறார்கள்? கோடீஸ்வரர்களைத் தேடிச் செல்கிறார்கள். அவர்களது வணிக நிறுவனங்கள், இல்லங்களைத் திறந்து வைக்கச் செல்கிறார்கள். பத்திரிகைகளுக்கு போஸ் கொடுப்பதற்காக அல்லாமல் இவர்கள் எந்தக் குடிசையிலும் கால் வைத்திருக்க மாட்டார்கள்.

இவ்வளவு எளிமையாகவும், பணிவாகவும் நடந்து கொண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மையறியாமல், தம் கவனத்துக்கு வராமல் தம்மால் மக்களுக்கு ஏதும் இடையூறு ஏற்பட்டிருக்குமோ என்று அஞ்சுகிறார்கள்.  மரணிப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன் அவர்கள் நோய் வாய்ப்பட்ட போது இது பற்றி மக்களுக்கு அவர்கள் செய்த பிரகடனம் அவர் களின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டதாகும்.

அந்த நிகழ்ச்சியை ஃபழ்லு என்பார் பின் வருமாறு விவரிக்கிறார்:நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோய் வாய்ப்பட்டிருந்த போது அவர்களிடம் நான் சென்றேன். அவர்களுக்கருகில் கட்டுப் போடுவதற்குரிய சிவப்புத் துணி இருந்தது. 'என் பெரிய தந்தை மகனே! இதை என் தலையில் கட்டுவீராக' என்றார்கள். அதை எடுத்து அவர்களின் தலையில் கட்டினேன். பின்னர் என் மீது அவர்கள் சாய்ந்து கொள்ள நாங்கள் பள்ளிவாசலுக்குள் நுழைந்தோம். (நபிகள் நாயகம் (ஸல்) மரணப் படுக்கையில் இருந்ததால் மக்கள் பெருமளவு அங்கே குழுமி யிருந்தனர்.) 'மக்களே! நிச்சயமாக நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன் தான். உங்களை விட்டுப் பிரியும் நேரம் நெருங்கி விடலாம். எனவே, உங்களில் எவருடைய மானத்திற்காவது, எவருடைய முடிக்காவது, எவருடைய உடம்புக்காவது, எவருடைய செல்வத்திற்காவது நான் பங்கம் விளைவித்திருந்தால் இதோ இந்த முஹம்மதிடம் கணக்குத் தீர்த்துக் கொள்ளுங்கள்! இதோ முஹம்மதின் மானம், முஹம்மதின் முடி, முஹம்மதின் உடல், முஹம்மதின் செல்வம். பாதிக்கப்பட்டவர் எழுந்து கணக்குத் தீர்த்துக் கொள்ளுங்கள்! அவ்வாறு செய்தால் முஹம்மதின் வெறுப்புக்கும், பகைமைக்கும் ஆளாக நேரிடுமோ என்று நான் அஞ்சுகிறேன் என்று உங்களில் எவரும் கூற வேண்டாம். அறிந்து கொள்க! நிச்சயமாக பகைமையும், வெறுப்பும் எனது சுபாவத்திலேயே இல்லாததாகும். அவை எனது பண்பிலும் இல்லாததாகும்' என்று கூறி விட்டுத் திரும்பினார்கள்.

மறு நாளும் இது போன்றே பள்ளிவாசலுக்கு வந்து இவ்வாறே பிரகடனம் செய்தார்கள். 'யார் என்னிடம் கணக்குத் தீர்த்துக் கொள்கிறீர்களோ அவர்கள் தாம் எனக்கு மிகவும் விருப்பமானவர்கள்' என்பதையும் சேர்த்துக் கூறினார்கள். அப்போது ஒரு மனிதர் எழுந்தார். 'அல்லாஹ்வின் தூதரே! உங்களிடம் ஒருவர் யாசகம் கேட்டு வந்தார். அவருக்கு அளிப்பதற்காக யாரேனும் எனக்குக் கடன் தருகிறீர்களா? என்று நீங்கள் கேட்டீர்கள். அப்போது நான் மூன்று திர்ஹம் (அன்றைய வெள்ளி நாணயம்) கடன் தந்தேன்' என்று கூறினார். உடனே என்னை அழைத்து 'இவர் கேட்டதை இவருக்குக் கொடுங்கள்' என்றார்கள்.இவ்வாறே பெண்கள் பகுதிக்கும் சென்றார்கள். அவர்களுக்கும் இவ்வாறே கூறினார்கள்.நூல் : முஸ்னத் அபீ யஃலா 6824

இப்படிச் சொல்லக் கூடிய துணிவு இன்றைய உலகில் ஒருவருக்கும் கிடையாது. என்னிடம் யார் கணக்குத் தீர்க்கிறாரோ அவர் தான் மற்றவர்களை விட எனக்கு நெருக்கமானவர் என்று இன்றைக்கு எவரேனும் கூற முடியுமா?

இந்த மாமனிதருக்குத் தான் இவ்வாறு பிரகடனம் செய்ய முடிகின்றது. இவ்வளவு தெளிவாகப் பிரகடனம் செய்த பிறகும், மக்களுக்கு இருந்த தயக்கம் முழுவதையும் நீக்கிய பிறகும் 'என்னை அடித்தீர்கள்; ஏசினீர்கள்' என்றெல்லாம் ஒருவர் கூடக் கூறவில்லை. பொது நன்மைக்காக வாங்கிய கடனை அவர்கள் மறந்து விட்டார்கள். அது மட்டுமே முறையிடப்பட்டது. இம்மாமனிதரால் எந்த மனிதருக்கும் முடியளவு கூட பாதிப்பு ஏற்படவே இல்லை.

இந்த நூல் நெடுகிலும் நபித் தோழர்கள் என்ற சொற்றொடர் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்தச் சமுதாயத்தில் சில பேர் நபிகள் நாயகத்துக்குத் தோழராக இருந்திருப்பார்கள் என்று யாரும் நினைக்க வேண்டாம். நபிகள் நாயகத்தின் மார்க்கத்தை ஏற்று அவர்கள் அணியில் சேர்ந்த ஒவ்வொருவரும் தமது தோழர்கள் என்று நபிகள் நாயகம் அறிவித்தார்கள். எந்த மன்னரும் தனது குடிமக்கள் அனைவரும் தனது நண்பர்கள் என அறிவித்ததில்லை. தொண்டர்கள் என்று தான் அறிவித்திருக்கிறார்கள்.

எந்த ஆன்மீகத் தலைவரும் தன்னை ஏற்றுக் கொண்டவர்களை தோழர்கள் என அறிவித்தது கிடையாது. மாறாக அவர்களை ஏற்றுக் கொண்டவர்கள் சீடர்கள் என்றே அறிவிக்கப்படுகின்றனர்.  தொண்டர்களும் சீடர்களும் இல்லாத அனைவரையும் தோழர் என அழைத்த ஒரே தலைவரும் ஒரே மன்னரும் ஒரே ஆன்மீகத் தலைவரும் நபிகள் நயாகம் மட்டுமே.

இதனால் தான் நபிகள் நாயகத்தின் காலத்தில் அவர்களை ஏற்ற அனைவரையும் முஸ்லிம்கள் இன்றளவும் தோழர்கள் எனக் குறிப்பிடுகின்றனர்.  இவ்வாறு அறிவித்து தம்மை மற்றவர்களுக்குச் சமமாகக் கருதி அதைப் பிரகடனம் செய்தவர் புகழுக்காகவோ மக்களின் செல்வாக்குப் பெறவோ பதவியை ஏற்றிருக்க இயலுமா?

எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தார் போல் தம்மை வரம்பு மீறிப் புகழக் கூடாது எனத் தெளிவான கட்டளையும் பிறப்பித்திருந்தார்கள். தம்மை வரம்பு மீறிப் புகழக் கூடாது என்று கடுமையான முறையில் எச்சரிக்கையும் செய்திருந்தார்கள்.

எங்கள் தலைவரே! எங்கள் தலைவரின் மகனே! எங்களில் சிறந்தவரே! எங்களில் சிறந்தவரின் மகனே! என்று ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறினார். அதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'மனிதர்களே! இறையச்சத்தைக் கவனமாகப் பேணிக் கொள்ளுங்கள்! ஷைத்தான் உங்களைத் திசை திருப்பி விட வேண்டாம். நான் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மத் ஆவேன். அல்லாஹ்வின் அடியானும், அவனது தூதருமாவேன். எனக்கு அல்லாஹ் தந்த தகுதிக்கு மேல் என்னை உயர்த்துவதை அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் விரும்ப மாட்டேன்' என்றார்கள். நூல் : அஹ்மத் 12093   இதே கருத்து அஹ்மத் 15726, 15717 ஆகிய ஹதீஸ்களிலும் கூறப்படுகிறது.

'
கிறித்தவ சமுதாயத்தினர் மர்யமின் மகன் ஈஸாவை வரம்பு மீறிப் புகழ்ந்தது போல் என்னை வரம்பு மீறிப் புகழாதீர்கள். நான் அல்லாஹ்வின் அடியானே. எனவே அல்லாஹ்வின் அடியான் என்றும் அவனது தூதர் என்றும் என்னைப் பற்றிக் கூறுங்கள்' என்று மேடையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரகடனம் செய்தார்கள். நூல் : புகாரி: 3445

தம்மை எல்லை மீறிப் புகழக் கூடாது என்று மக்கள் மன்றத்தில் கடுமையாக எச்சரிக்கை செய்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது பதவியின் மூலம் புகழடைய விரும்பியிருப்பார்கள் என்று கருத இயலுமா?



தொடரும்….

நன்றி: WWW.ONLINEPJ.COM 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக