இறைவனிடம் கையேந்துங்கள்
ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன்
பாகம் : 2
அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே!
நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள்
உங்களுக்குப் பதில் தரட்டும்! (அல்குர்ஆன்
7:194)
மிக அருகில் இருந்து
கொண்டு அனைவரின் பிரார்த்தனைகளைச் செவியுறுகின்ற வல்ல இறைவனிடம் பிரார்த்திப்பதை
விட்டு விட்டு மற்றவர்களைப் பிரார்த்திப்பவர்களுக்கு இந்த வசனங்களில் போதுமான
எச்சரிக்கை இருக்கிறது.
இறைவன் அருகில் உள்ளதும், அவன் மாத்திரமே பிரார்த்தனைக்குத் தகுதியானவன் என்பதும் தான் இயற்கையான கடவுள்
கொள்கையாகும்.
பல்வேறு தெய்வங்களை -
பெரியார்களை வழிபடக் கூடியவன் கடுமையான, தாங்க முடியாத ஆபத்தைச் சந்திக்கும்
போது அவனது வாய்,கடவுளே! அல்லாஹ்வே! என்று தான் உச்சரிக்கின்றது. சின்னச்
சின்ன தேவைகள் விஷயத்தில் தான், கடவுள் தூரத்தில் இருப்பதாக மனிதன்
எண்ணுகிறான். கழுத்துக்குச் சுருக்கு வரும் நேரத்தில் எந்த அவுலியாவையும் எந்தச்
சிலைகளையும் மனிதன் அழைப்பதில்லை. அல்லாஹ், கடவுள் என்ற வார்த்தை தான்
அவனிடமிருந்து புறப்படுகின்றது. திருமறைக் குர்ஆனிலும் அல்லாஹ் இதை அழகாக
விளக்குகிறான்.
கடலில் உங்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டால் அவனைத் தவிர யாரை அழைக்கிறீர்களோ
அவர்கள் மறைந்து விடுகின்றனர். அவன் உங்களைக் காப்பாற்றிக் கரை சேர்த்தவுடன்
புறக்கணிக்கிறீர்கள்! மனிதன் நன்றி கெட்டவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 17:67)
உங்களிடம் அல்லாஹ்வின் வேதனை வந்தால் அல்லது அந்த நேரம் வந்து விட்டால்
அல்லாஹ் அல்லாதவர்களையா அழைக்கிறீர்கள்? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால்
பதில் சொல்லுங்கள்! என்று கேட்பீராக! மாறாக அவனையே அழைக்கிறீர்கள். நீங்கள்
இணை கற்பித்தவர்களை மறந்து விடுகிறீர்கள். அவன் நாடினால் அவனை எதற்காக
அழைத்தீர்களோ அதை நீக்கி விடுகிறான். (அல்குர்ஆன் 6:40, 41)
மனிதனுக்குத் தீங்கு ஏற்படுமானால் படுத்தவனாகவோ, அமர்ந்தவனாகவோ, நின்றவனாகவோ
நம்மிடம் பிரார்த்திக்கிறான். அவனது துன்பத்தை அவனை விட்டு நாம் நீக்கும் போது
அவனுக்கு ஏற்பட்ட துன்பத்திற்காக நம்மை அழைக்காதவனைப் போல் நடக்கிறான். இவ்வாறே
வரம்பு மீறியோருக்கு அவர்கள் செய்து வந்தவை அழகாக்கப்பட்டுள்ளன. (அல்குர்ஆன்
10:12)
அவர்கள் கப்பலில் ஏறிச் செல்லும் போது
பிரார்த்தனையை அவனுக்கே உளத்தூய்மையுடன் உரித்தாக்கி அல்லாஹ்வைப்
பிரார்த்திக்கின்றனர். அவர்களைக் காப்பாற்றி தரையில் சேர்த்ததும் அவர்கள் இணை
கற்பிக்கின்றனர். (அல்குர்ஆன்
29:65)
மனிதர்களுக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது தமது
இறைவனிடம் திரும்பி அவனிடம் பிரார்த்திக்கின்றனர். பின்னர் அவர்களுக்குத் தன்
அருளை அவன் சுவைக்கச் செய்தால் நாம் அவர்களுக்கு வழங்கியதற்கு நன்றி மறந்து தமது
இறைவனுக்கு அவர்களில் ஒரு பகுதியினர் இணை கற்பிக்கின்றனர். அனுபவியுங்கள்! அறிந்து
கொள்வீர்கள். (அல்குர்ஆன்
30:33,
34)
மனிதனுக்கு ஒரு தீங்கு ஏற்படுமானால் தனது இறைவனிடம் சரணடைந்தவனாக அவனை
அழைக்கிறான். பின்னர் இறைவன் தனது அருட்கொடையை வழங்கும் போது முன்னர் எதற்காகப்
பிரார்த்தித்தானோ அதை அவன் மறந்து விடுகிறான். அல்லாஹ்வின் பாதையை விட்டு வழி
கெடுப்பதற்காக அவனுக்கு இணை கற்பிக்கிறான். உனது (இறை) மறுப்பில் சிறிது காலம்
சுகம் அனுபவித்துக் கொள்! நீ நரகவாசிகளைச் சேர்ந்தவன் எனக் கூறுவீராக! (அல்குர்ஆன் 39:08)
இறைவன் மிக அருகில்
இருப்பதை மனிதனின் உள் மனது ஒப்புக் கொள்கிறது. அவனாக உருவாக்கிக் கொண்ட போலியான
காரணங்களால் தான் இறைவனை விட்டு மனிதன் மற்றவர்களை நாடுகிறான் என்பதற்கு இவ்வசனம்
சரியான சான்றாக அமைந்துள்ளது.
இறைவன் எல்லா மனிதர்களும்
நெருங்கக் கூடிய இடத்தில் இருக்கிறான் என்று நம்பக் கூடியவர்கள் எவர்
முன்னிலையிலும் தமது சுய மரியாதையை இழக்க மாட்டார்கள்
·
எவர் காலிலும் விழ மாட்டார்கள்.
·
காணிக்கை செலுத்தி எவரிடத்திலும் ஏமாற மாட்டார்கள்.
·
மலஜலத்தைச் சுமந்திருக்கின்ற எவரையும் புனிதர்களாகக் கருத மாட்டார்கள்.
·
மதத்தின் பெயராலும், பிள்ளை வரம் என்ற பெயராலும் பெண்கள்
கற்பிழக்க மாட்டார்கள்.
·
இறைவன் அருகில் இருக்கிறான் என்று நம்பக் கூடியவர்கள் எவருக்கும் துரோகம்
செய்ய மாட்டார்கள்.
·
எவர் பொருளையும் முறைகேடாகப் பெற முயற்சிக்க மாட்டார்கள்.
·
யாருக்கும் அநீதி இழைக்க மாட்டார்கள்.
·
திருட மாட்டார்கள்.
·
கொலை செய்ய மாட்டார்கள்.
·
பொய் பித்தலாட்டங்களில் ஈடுபட மாட்டார்கள்.
·
லஞ்ச ஊழலில் ஈடுபட மாட்டார்கள்.
இறைவன் மிக அருகில்
இருக்கிறான் என்று நம்புவதால் மனிதன் பெறும் நன்மைகள் ஏராளம்! ஏராளம்!!
பிரார்த்தனையின்
ஒழுங்குகள்
இறைவன் மிக அருகில்
இருந்து, அனைவரின் கோரிக்கைகளையும் அவன் நிறைவேற்றுகிறான் என்றால் நாங்கள் கேட்கும்
எத்தனையோ பிரார்த்தனைகளுக்கு எந்தப் பலனும் ஏற்படவில்லையே என்று அரை குறை
நம்பிக்கையுள்ளவன் நினைக்கிறான். இதனால் இறைவனிடம் பிரார்த்தனை செய்வதையே விட்டு
விடக் கூடியவர்களும் உள்ளனர். பிரார்த்தனை செய்வதற்குரிய ஒழுங்குகளை அவர்கள்
கடைப்பிடிக்காததும், பிரார்த்தனை ஏற்கப்படுவதற்குரிய
நிபந்தனைகளை அவர்கள் பேணாததும் தான் இதற்குக் காரணம்.
ஒரு அடியான் அல்லாஹ்விடம் கையேந்திக் கேட்கும் போது வெறுங்கையாக
திருப்பியனுப்ப இறைவன் வெட்கப்படுகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்)
கூறியுள்ளனர் அறிவிப்பவர்: ஸல்மான் பார்ஸீ (ரலி) நூற்கள்: அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா, ஹாகிம்
எந்தப் பிரார்த்தனையும்
நிராகரிக்கப்படுவதில்லை என்ற உத்தரவாதத்தை இந்த நபிமொழி வழங்குகின்றது.
அப்படியானால் சிலரது பிரார்த்தனைகள் மறுக்கப்பட காரணங்கள் என்ன?
ஹராமானவற்றைத்
தவிர்க்க வேண்டும்
நீண்ட பயணத்தில் ஒருவன் புறப்பட்டு, ஆடைகளும் உடம்பும் புழுதி படிந்த
நிலையில், இறைவா! இறைவா! என்று பிரார்த்திக்கிறான். அவனது உடை, உணவு, பானம் ஆகியவை ஹராமானதாக இருக்கும் போது அவனது பிரார்த்தனை எவ்வாறு
அங்கீகரிக்கப்படும்? என்று நபிகள் நாயகம் (ஸல்)
கூறியுள்ளனர். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 1686
மார்க்கத்தில் தடை
செய்யப்பட்ட முறையில் பொருளீட்டி உண்பதால் ஒருவனது துஆ அங்கீகரிக்கப்படுவதில்லை
என்பதை இந்த ஹதீஸ் விளக்குகின்றது. தங்களின் பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட
வேண்டுமென்று விரும்பக் கூடியவர்கள் அனுமதிக்கப்பட்ட முறையில் பொருளீட்டுவதில்
கவனம் செலுத்த வேண்டும்.
அவசரப்படக்
கூடாது
அல்லாஹ்விடம்
பிரார்த்திக்கும் போது அவசரப்படக் கூடாது. ஒன்றுக்குப் பலமுறை திரும்பத் திரும்பக்
கேட்க வேண்டும். ஒரு தடவை பிரார்த்தனை செய்து விட்டு நான் கேட்டேன்; கிடைக்கவில்லை என்ற முடிவுக்கு வந்து விடக் கூடாது. இத்தகைய எண்ணத்துடன் கேட்பவர்களின்
துஆக்கள் அங்கீகரிக்கப்படுவதில்லை. நாம் கேட்டவுடன் தருவதற்கு அல்லாஹ் நமது
வேலையாள் அல்ல! அவன் நமது எஜமானன். எஜமானனிடம் கெஞ்சிக் கேட்பதே முறையாகும்.
நான் பிரார்த்தனை செய்தேன்; அங்கீகரிக்கப்படவில்லைஎன்று கூறி
அவசரப்படாத வரை உங்கள் துஆக்கள் அங்கீகரிக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்)
கூறியுள்ளனர். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6340
பாவமானதைக்
கேட்கக் கூடாது
பிரார்த்திக்கும் போது
இறைவன் எதைத் தடை செய்துள்ளானோ, அதைக் கேட்கக் கூடாது. இறைவா!
லாட்டரிச் சீட்டில் என்னைப் பணக்காரனாக்கு! என்பது போன்ற பிரார்த்தனைகள் இறைவனால்
அங்கீகரிக்கப்படுவதில்லை.
பாவமானவற்றையும், உறவினரைப் பகைப்பதாகவும், பிரார்த்திக்காத வரை அடியானின் பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட்டுக் கொண்டே
இருக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர் அறிவிப்பவர்:
அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 4918
மரணத்தைக்
கேட்கக் கூடாது
முதுமையின் காரணமாக
மற்றவர்களுக்குப் பாரமாகி, சொந்த பந்தங்கள் கூட
அலட்சியப்படுத்துவதைக் காணும் போது ஏன் இவ்வுலகில் நாம் வாழ வேண்டும்? என்று எண்ணுவார்கள். இறைவா! சீக்கிரம் என்னை மரணிக்கச் செய்து விடு!என்று
பிரார்த்தனை செய்து விடுவார்கள்.
எந்த நிலையிலும் யாரும்
மரணத்தை இறைவனிடம் கேட்கவும் கூடாது; மனதால் அதற்கு ஆசைப்படவும் கூடாது
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.
தனக்கு ஏற்பட்ட துன்பத்தின் காரணமாக உங்களில் யாரும் மரணிக்க ஆசைப்படக்
கூடாது. அப்படிச் செய்ய வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டால் இறைவா! நான்
வாழ்வது எனக்குச் சிறந்ததாக இருக்கும் வரை என்னை வாழ வை! நான் மரணிப்பது எனக்கு
நல்லதாக இருந்தால் என்னை மரணிக்கச் செய் என்று கூறட்டும் என
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) நூல்:
புகாரி 5671, 6351
இறந்தவருக்காகப்
பிரார்த்தனை செய்தல்
இறந்தவர்களுக்காக, உயிருடன் உள்ளவர்கள் செய்யும் மற்றொரு நன்மை அவருக்காக அதிகமதிகம்
அல்லாஹ்விடம் துஆச் செய்வதாகும்.
அவர்களுக்குப் பின் வந்தோர் எங்கள் இறைவா! எங்களையும், நம்பிக்கையுடன் எங்களை
முந்தி விட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக! எங்கள் உள்ளங்களில் நம்பிக்கை
கொண்டோர் மீது வெறுப்பை ஏற்படுத்தி விடாதே! நீ இரக்கமுடையோன்; நிகரற்ற அன்புடையோன்என்று
கூறுகின்றனர். அல்குர்ஆன் 59:10
குறிப்பாக இறந்தவரின்
பிள்ளைகள் துஆச் செய்வது இறந்தவருக்குப் பெரிதும் பயன் தரும்.
ஒரு மனிதன் மரணித்து விட்டால் மூன்று காரியங்கள் தவிர மற்ற செயல்பாடுகள்
முடிந்து விடும். அவை: நிலையான தர்மம், பிறர் பயன்பெறும் கல்வி, தனக்காகப் பிரார்த்தனை செய்யும் நல்லொழுக்கமுள்ள சந்ததி என்று
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 3084
மனிதன் மரணித்த பின் பயன்
தரும் மூன்று காரியங்களில் பெற்றோருக்காகப் பிள்ளைகள் செய்யும் பிரார்த்தனையையும்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே பிள்ளைகள் தமது
பெற்றோருக்காக அதிகமதிகம் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து கொண்டே வர வேண்டும்.
இதனால் பெற்றோர் நன்மைகளை அடைவார்கள்.
தொடரும்.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக