நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 3:104)

புதன், மார்ச் 13, 2013

குளிப்பின் ஒழுங்குகள்


குளிப்பின் ஒழுங்குகள்

பி. ஜைனுல் ஆபிதீன்
1. உளூச் செய்தல்
கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது, அதற்கு முன்னர் உளூச் செய்வது நபிவழியாகும். அவ்வாறு உளூச் செய்யும் போது, கால்களை மட்டும் கடைசியாக (குளித்து முடிக்கும் போது) கழுவுவதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிமுறையாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது தமது கைகளைக் கழுவிக் கொண்டு, தொழுகைக்குச் செய்வது போல் உளூச் செய்வார்கள். (புகாரி 248, 249)

குளித்து முடித்ததும் தாம் நின்ற இடத்தை விட்டு சற்று விலகி இரு கால்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கழுவுவார்கள். (புகாரி 249, 257, 259, 265, 266, 274, 276, 281)

2. மர்மஸ்தானத்தையும் உடலில் பட்டுள்ள அசுத்தத்தையும் கழுவுதல்
கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது, தாம்பத்தியத்தின் மூலம் உடலில் பட்ட அசுத்தங்களையும், மர்ம ஸ்தானத்தையும் கழுவ வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளனர்.
(பார்க்க: புகாரி 249, 259, 260, 265, 266, 274, 276, 281)
வலது கையால் இடது கையில் தண்ணீர் ஊற்றி, இடது கையால் மர்மஸ்தானத்தைக் கழுவுவார்கள் என்று மேற்கண்ட ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.

3. தலையைக் கோதி விட்டுப் பின்னர் குளித்தல்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கைகளைத் தண்ணீரில் நனைத்து, ஈரக் கையால் தலையின் அடிப் பாகத்தைக் கோதி விட்டுப் பின்னர் மூன்று தடவை தலையில் தண்ணீரை ஊற்றுவார்கள். (புகாரி 248)
....பின்னர் தமது கையால் தலை முடியைக் கோதுவார்கள். முடியின் அடிப்பாகம் நனைந்து விட்டது என்று அவர்கள் நினைக்கும் போது மூன்று தடவை தலையில் தண்ணீர் ஊற்றுவார்கள். (புகாரி 273)

4. இரண்டு, மூன்று தடவை தண்ணீர் ஊற்றுவது போதும்
கடமையான குளிப்பை நிறைவேற்றுவதற்கு மணிக் கணக்கில் தண்ணீரில் ஊற வேண்டும் என்பது அவசியமில்லை. மாறாக இரண்டு அல்லது மூன்று தடவைகள் உடலிலும், மூன்று தடவை தலையிலும் ஊற்றிக் கொள்வதே போதுமானதாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குளிப்பதற்காக நான் தண்ணீர் எடுத்து வைத்தேன். தமது இரு கைகளிலும் தண்ணீரைச் சாய்த்து இரண்டு தடவைகள் அல்லது மூன்று தடவைகள் கைகளைக் கழுவினார்கள். பின்னர் தமது வலது கையால் இடது கை மீது தண்ணீரைச் சாய்த்து தமது மர்ம உறுப்பைக் கழுவினார்கள். பின்னர் தமது கையைத் தரையில் தேய்த்துக் கழுவினார்கள். பின்னர் வாய் கொப்பளித்து மூக்கையும் சுத்தம் செய்தார்கள். பின்னர் முகத்தையும், கைகளையும் கழுவினார்கள். தமது தலையை மூன்று தடவை கழுவினார்கள். பின்னர் உடலில் ஊற்றினார்கள். பின்னர் தாம் நின்ற இடத்திலிருந்து விலகி பாதங்களைக் கழுவினார்கள். இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி மைமூனா (ரலி) அறிவிக்கின்றார்கள். (புகாரி 257, 265, 266)

நமது முடிகளில் ஒன்றிரண்டு நனையாமல் இருக்குமோ என்று சில பேர் எண்ணிக் கொண்டு குடம், குடமாகத் தண்ணீரை ஊற்றுவார்கள். இவ்வாறு அதிகம் அலட்டிக் கொள்வது தேவையில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்தது போல் ஈரக் கையால் தலையின் அடிப் பாகத்தில் தடவிக் கோதிய பின் மூன்று தடவை தலையின் மீது தண்ணீர் ஊற்றிக் கொள்வதே போதுமானதாகும். இதை மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து அறியலாம். இது பற்றி இன்னும் தெளிவாக ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னிலையில் குளிக்கும் முறை பற்றி சிலர் தர்க்கம் செய்து கொண்டிருந்தனர். அப்போது சிலர், "நான் என் தலையை இப்படி, இப்படியெல்லாம் (தேய்த்துக்) கழுவுவேன்'' என்று கூறினார்கள். அதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "நான் மூன்று கை தண்ணீர் எடுத்து என் தலையில் ஊற்றிக் கொள்வதோடு சரி'' என்று குறிப்பிட்டார்கள். (முஸ்லிம் 493)

"நானோ இரண்டு கைகளாலும் தண்ணீர் எடுத்துத் தலையில் ஊற்றிக் கொள்வதோடு சரி'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக புகாரி (254) அறிவிப்பில் உள்ளது.

கடமையான குளிப்பு அல்லாத சாதாரண குளிப்பைப் பற்றியதாக இது இருக்குமோ என்று சிலர் நினைக்கக் கூடும்.

முஸ்லிமில் இடம் பெற்ற (494வது) ஹதீஸில் கடமையான குளிப்பைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதாகக் கூறப்பட்டுள்ளது.

எனவே கடமையான குளிப்புக்கே இவ்வாறு செய்யலாம் என்பதில் ஐயமில்லை.

ஹஸன் பின் முஹம்மத் என்பார், "கடமையான குளிப்பு எவ்வாறு?'' என்று என்னிடம் கேட்டார். "நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூன்று கையளவு தண்ணீர் எடுத்து, அதைத் தலையில் ஊற்றுவார்கள். பின்னர் உடல் முழுவதும் ஊற்றுவார்கள்'' என்று கூறினேன். "எனக்குத் தலை முடி அதிகம் உள்ளதே'' என்று அவர் கூறினார். "நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உன்னை விட அதிகமான தலை முடி இருந்தது'' என்று நான் விடையளித்தேன் என்று ஜாபிர் (ரலி) கூறினார்கள். (புகாரி 256)
ஜாபிர் (ரலி) அவர்களுடன் நானும், என் தந்தையும், மற்றும் சிலரும் இருந்தோம். "எவ்வாறு குளிப்பது'' என்று ஜாபிர் (ரலி) அவர்களிடம் சிலர் கேட்டனர். "ஒரு ஸாவு (இரண்டு கை நிறைய கொள்ளும் தண்ணீரின் நான்கு மடங்கு) உனக்குப் போதும்'' என்று ஜாபிர் (ரலி) கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், "அந்த அளவு எனக்குப் போதாதே'' என்று கேட்டார். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், "உன்னை விட அதிகம் தலை முடி இருந்த, உன்னை விட சிறந்த நபிகள் நாயகத்துக்கே அந்த அளவு போதுமானதாக இருந்தது'' என்று கூறினார்கள். (புகாரி 252)

பெண்கள் சடைகளை அவிழ்க்க வேண்டுமா?

பின்னப்பட்ட சடைகளை அவிழ்த்து விட்டுத் தான் கடமையான குளிப்பை நிறைவேற்ற வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். அது தவறாகும். ஹதீஸ்களை ஆராயும் போது முடிக்குக் கீழே உள்ள தோல் தான் கட்டாயமாக நனைய வேண்டுமே தவிர ஒவ்வொரு முடியும் நனைய வேண்டும் என்பது கட்டாயமில்லை என்பதை அறியலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஈரக் கையால் தலையின் அடிப்பாகத்தைத் தேய்ப்பார்கள் என்றும் அடிப்பாகம் நனைந்து விட்டது என்று நினைக்கும் போது தலையில் தண்ணீர் ஊற்றுவார்கள் என்றும் கூறப்பட்ட விளக்கத்திலிருந்து இதை அறியலாம்.

இதை இன்னும் தெளிவாகவே விளக்கும் ஹதீஸ்களும் உள்ளன.
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் பெண்கள் குளிக்கும் போது தமது சடைகளைப் பிரித்து விட வேண்டும் என்று வற்புறுத்தினார். இதைப் பற்றிக் கேள்விப்பட்ட ஆயிஷா (ரலி) அவர்கள், "அப்துல்லாஹ் பின் அம்ரு கூறுவது ஆச்சரியமாக உள்ளது. பெண்கள் குளிக்கும் போது சடையைப் பிரிக்க வேண்டும் என்று இவர் என்ன கூறுவது? தலையை மொட்டை போடுமாறு கூற வேண்டியது தானே? நானும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் ஒரு பாத்திரத்தில் ஒன்றாகக் குளித்திருக்கிறோம். நான் மூன்று தடவை தண்ணீர் ஊற்றுவதை விட வேறு ஒன்றும் செய்ய மாட்டேன்'' என்று கூறினார்கள். (முஸ்லிம் 498)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  முன்னிலையில் சடையைப் பிரிக்காமல் ஆயிஷா (ரலி) அவர்கள் குளித்திருக்கிறர்கள். சடையைப் பிரிப்பது அவசியம் என்று இருந்தால் சடையைப் பிரிக்குமாறு கூறியிருப்பார்கள்.

"அல்லாஹ்வின் தூதரே! நான் தலையில் சடை போட்டிருக் கிறேன். கடமையான குளிப்புக்காக நான் சடையை அவிழ்க்க வேண்டுமா?'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், "வேண்டிய தில்லை. உன் தலையில் மூன்று தடவை தண்ணீர் ஊற்றிக் கொள்வதே போதுமானதாகும். பின்னர் உன் மீது தண்ணீரை ஊற்றிக் கொள். நீ தூய்மையாகி விடுவாய்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி) நூல்: முஸ்லிம் 497

முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில் "மாதவிடாய் நின்று குளிக்கும் போதும், கடமையான குளிப்பின் போதும் சடையை அவிழ்க்க வேண்டுமா?'' என்று கேட்ட போது, "வேண்டியதில்லை'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது.

எனவே தலையின் அடிப்பாகம் நனைவது தான் கட்டாயமானது. மேலே உள்ள முடிகள் நனையாமல் இருப்பதால் குளிப்புக்கு எந்தக் குறைவும் ஏற்படாது.

சடையை அவிழ்க்காமல் குளிக்கும் போது, பாதிக்கு மேற்பட்ட முடிகள் நனைவதற்கு வாய்ப்பே இல்லை. அப்படி இருந்தும் சடையை அவிழ்க்கத் தேவையில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.


பி. ஜைனுல் ஆபிதீன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக